குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கக் கோரிக்கை – ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு!

Saturday, June 23rd, 2018

வடக்கு மாகாணத்தை சேர்ந்த குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு வெளி மாவட்டங்களில் வழங்கப்பட்ட நியமனத்தை வடக்கு மாகாணத்துக்குள் மாற்றி வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநருக்கு பாதிக்கப்பட்ட குடும்பநல உத்தியோகத்தர்கள் நேற்று மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்து அதில் தெரிவு செய்யப்பட்டடோம். தாதியர் பயிற்சிக் கல்லூரியில் குடும்பநல உத்தியோகத்தர் பயிற்சி நெறியையும் நிறைவு செய்து பரீட்சையையும் எழுதி புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் உள்ளோம்.

எமக்கு வடக்கு மாகாணத்தில்தான் நியமனம் என பணிப்பாளரால் கூறப்பட்டது. அதை நம்பியிருந்தோம். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் எம்மை கொழும்புக்கு வருமாறு எந்தவித எழுத்து மூலமோ வடக்கு நிர்வாகம் மூலமோ அறியத் தராமல் பதிவுகளை மேற்கொண்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சையில் பெற்ற புள்ளிகள் முன்னிலை அடிப்படையிலும் இந்த நியமனம் வழங்கப்படவில்லை.

அமைச்சர் அழைத்து அந்த இரு நாட்களும் கொழும்புக்கு சென்று கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களுக்கு சொந்த மாகாணமும் கொழும்புக்கு செல்லாதவர்களுக்கு வெளி மாகாணங்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப சுகாதார சேவைக்கு வடக்கு மாகாணத்தில் தான் நியமனம் கிடைக்கும் என்று நம்பியிருந்த எமக்கு பேரிடியாக அமைந்துள்ளதாலும் மொழிப்பிரச்சினை, இடப் பிரச்சினை வெளிக்களத்தில் கடமைபுரியும் அச்ச நிலைகள் உள்ளதாலும் இந்த நியமனத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.  நாம் பெறற் பயிற்சியின் மூலம் எங்கள் சேவையை வினைத்திறனாக செய்வதற்கு வடக்கு மாகாணத்தில் நியமனத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: