கிராம அலுவலரின் வீட்டுக்குள் அத்துமீறிய கும்பல் அட்டகாசம்! ஜன்னல், மோட்டார் சைக்கிள்கள் அடித்துடைப்பு!

தெல்லிப்பழை – கட்டுவன்புலம் வீதியிலுள்ள கிராம அலுவலர் ஒருவரின் வீட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு புகுந்த இளைஞர் குழுவொன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பியோடியது.
தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் ஜே – 228 தெல்லிப்பழை கிராம அலுவலர் பிரிவில் கடமையாற்றும் கிராம அலுவலர் பா.பாலேந்திரா என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.
புதன்கிழமை இரவு 11.15 மணியளவில் வீட்டின் வெளிப்பகுதியில் கிராம அலுவலர் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் தலைக்கவசத்தால் முகங்களை மறைத்தவாறு பிரதான கேற்றின் வழியாக வீட்டுக்குள் ஏறிப் பாய்ந்துள்ளனர்.
இதனை அவதானித்த கிராம அலுவலர் அச்சத்தில் வீட்டுக்குள் சென்று கதவுகளைப் பூட்டிவிட்டு சென்று மின்சாரத்தை துண்டித்து விட்டு வீட்டினுள்ளேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்த இளைஞர்கள் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கினர். வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் அவர்கள் அடித்து நொருக்கி சேதப்படுத்தினர்.
இது தொடர்பில் கிராம அலுவலரால் தொலைபேசி ஊடாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு முறையிடப்பட்டது. இளைஞர்கள் தப்பிச்சென்ற பின்னர் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
Related posts:
|
|