காக்கைதீவில் மீன் சந்தை வேண்டாம் – கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம்!

Wednesday, October 12th, 2016

காக்கைதீவில் நங்கூரமிடும் வகையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படவுள்ளமையால், அதற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை மீன் சந்தையை அமைக்கக்கூடாது என கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அவர் தனது கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘150 வருடங்களுக்கு முன்பு இருந்த இறங்குதுறையானது 12 வள்ளங்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது யாழ். மாவட்டத்தில் இரண்டாவது இறங்குதுறையாக காக்கைதீவு காணப்படுகின்றது.

1960ஆம் ஆண்டு இப்பகுதியில் மீன் சந்தையை ஏலம் விடுவதற்கு முற்பட்ட போது, மானிப்பாய் கிராம சபைக்கும் சாவற்கட்டு கடற்றொழிலாளர்களுக்கும் நடந்த சண்டையில் உயிர்ச்சேதமும் இடம்பெற்றது.

தற்போது, இந்த காக்கைதீவு இறங்குதுறையானது  ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன், நங்கூரமிடும் துறைமுகமாக முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி வேலைத்தி;டத்தை மொறட்டுவ தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கடற்றொழில் அமைச்சு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாண அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ளன. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 2017ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இத்துறைமுகத்தில் மானிப்பாய் பிரதேச சபையானது மீன் விற்பனை நிலையம் ஒன்றை நிறுவ முயற்சிக்கின்றது. இதனை பின்வரும் காரணங்களை கருத்திற்கொண்டு நிறுத்த வேண்டும் என கேட்கின்றோம்.

இந்த மீன் விற்பனை நிலையம் தற்போது அமைக்கப்படுவது நங்கூரமிடும் இறங்குதுறைமுக பணிகளுக்கு இடையூறாக காணப்படும்.கடற்பகுதியுடன் கொங்கிறீட் அத்திபாரம் ஒன்று கட்டப்படாமல், மணல் நிரப்பப்படும் போது, மழை காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கின் போது, இம்மணல் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிடும். இதனால் இதற்கு செலவு செய்யப்படும் பொதுமக்களின் நிதி வீணடிக்கப்படும்.

இம்மாதிரியான மீன் விற்பனை நிலையம் மேற்படி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு, செய்யப்பட வாய்ப்புக்கள் உள்ளன. அதனால், இந்நிதியினை வேறு தேவைக்கு பயன்படுத்த முடியும். ஏற்கெனவே இவ்வாறு ஒரு விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு, 2 மில்லியன் ரூபாய் நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது.இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு பிரதேச சபை மீன் சந்தை அமைப்பதை நிறுத்த வேண்டும் எனக்கோரியுள்ளார்.

Untitled-1 copy

Related posts: