கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம் – 4,513 பரீட்சை நிலையங்களில் 622,305 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, February 28th, 2021

ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நாளையதினம்  ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிமுதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி பத்திரம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் இதுவரை கிடைக்காத பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தையோ அல்லது பரீட்சை இலக்கத்தையோ பயன்படுத்தி மேற்படி அனுமதிப்பத்திரத்தின் பிரதி ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அனைத்து பரீட்சை நிலையங்களும் கிருமித் தொற்று நீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் பரீட்சை நடைபெறும் தினங்களில் ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே பரீட்சை நிலையத்திற்கு வருகை தர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 622,305 மாணவர்கள், 4,513 பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதவுள்ளனர்.

423,746 பாடசாலை மாணவர்களும், 198,606 தனியார் பரீட்சார்த்திகளும் இவ்வாறு பரீட்சை எழுதவுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு சிறப்பு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன். அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிராந்திய சுகாதார அலுவலர்களுடன் கலந்தாலோசித்து மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: