கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Sunday, August 22nd, 2021

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –  

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய பொருள் விநியோகத்துடன் தொடர்புடையவர்கள், தொழிலுக்கு செல்வோர் மற்றும் மேற்குறிப்பிட்ட இரு விடயங்களும் இன்றி மருத்துவ தேவை அல்லது மரண வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு செல்வோருக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

அலுவலகங்களுக்குச் செல்வோர் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க முடியும் அல்லது அலுவலக பிரதானிகளால் வழங்கப்பட்ட கடிதத்தை தம்வசம் வைத்திருக்க வேண்டும்.

ஆவணங்கள் சந்தேகத்துக்கிடமானவை என்று கண்காணிப்புக்களில் ஈடுபடும் பொலிஸார் கருதும் பட்சத்தில் அலுவலகத்திலுள்ள ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தக் கூடிய வசதிகளையும் அலுவலக பிரதானிகள் உத்தியோகத்தர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் சகல பிரதேசங்களிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஏதேனுமொரு வழியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: