கணவரால் வன்புணரப்பட்ட மகளைப் புதைத்தோம் – தாய் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்!

Friday, January 11th, 2019

பெற்ற மகளைக் கொன்று புதைத்த சந்தேகத்தில் பதுளை ஹாலி எல – கன்தேகெதரசார்ணியாத் தோட்டம் மஹதென்ன பிரிவில் வசித்த 28 வயதுடைய தாய் ஒருவரையும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய அவருடைய கணவரையும் கடந்த 6 ஆம் திகதி பதுளை பொலிஸார் கைது செய்தனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதமளவில் சிறுமியைக் கொலை செய்து வீட்டுக்கு அருகிலுள்ள தோட்டத்தில் புதைத்திருப்பதாக தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே குறித்த இருவரையும் கைது செய்து விசாரணை இடம்பெற்றது.

ஒன்றுவிட்ட உறவினர் ஒருவருடன் மேற்கொண்ட தகாத உறவால் கர்ப்பமடைந்த வவுனியா – செட்டிகுளத்தைச் சேர்ந்த குறித்த தாய் செட்டிகுளத்திலிருந்து மஹதென்ன பகுதிக்கு வந்து தங்கி அங்கு வேறொருவரைத் திருமணம் செய்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி அவருக்கு இந்தப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னரான திருமண வாழ்வில் இரண்டு குழந்;தைகள் பிறந்துள்ளன. மூத்த பெண் பிள்ளையைக் கணவர் பலமுறை துன்புறுத்தியதுடன் வன்புணர்வுகளையும் மேற்கொண்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதியன்று தாய் வீட்டில் இல்லாத சமயத்தில் அந்தப் பிள்ளை கொல்லப்பட்டிருக்கின்றது. வெளியே சென்று வந்த தாய் சமையலறையில் இறந்து கிடந்த தனது பிள்ளையைக் கண்டு கணவரிடம் வினவியபோது கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இறந்தமை குறித்து எவருக்கும் கூறவேண்டாம், யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுவோம், வெளியே தெரிந்தால் எல்லோரும் சிறைக்குப் போக வேண்டியேற்படும் என்று கணவரும் கணவரின் தாயாரும் கூறியுள்ளனர்.

இதற்குத் தாய் இணங்கிய பட்சத்தில் கொல்லப்பட்ட சிறுமி வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் தாயாரிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து மேற்படி விடயம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சிறுமியின் சடலத்தைத் தோண்டி எடுத்துப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி பதுளை மேலதிக நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட இடத்தைப் பொலிஸார் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தினர்.