கடத்தப்பட்ட மாணவர்களை துண்டாக வெட்டி கங்கையில் வீசப்பட்டனர் – நீதிமன்றில் சாட்சியம்!
Wednesday, March 15th, 2017கொழும்பு மாவட்டத்தில் வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணையாளரும் பொலிஸ் பரிசோதகருமான நிசாந்த சில்வா குறித்த தகவலை கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இதில் 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கொமாண்டர் சுமித் ரணசிங்க மற்றும் கடற்படை கெப்டன் வெகெதர ஆகியோரின் வாக்கு மூலங்களின் ஊடாக இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் அலி ஹாஜியார், ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.
மேலும், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த கனகராஜா கஜன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர்.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவின் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான அனுஜ பிரேமரதன, அசித் சிறிவர்தன, ரசிக பாலசூரிய உள்ளிட்ட 10 பேர் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிமன்றுக்கு தெரிவிக்கையில்,
கடத்தப்பட்ட 11 பேரும் கொழும்பு சைத்திய வீதியில் உள்ள பிட்டு பம்பு, திருகோணமலை நிலத்தடி சிறைக்கூடமான கன்சைட் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த சம்பவம் கடற்படை லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சியின் கீழ் இயங்கிய குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமைக்கான ஆதரங்கள் உள்ளன. அவை அனைத்தும் இன்று மன்றுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களில் நால்வரை திருமலைக்கு கொண்டு போகும் வழியில் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி களனி கங்கையில் வீசிவிட்டதாக உபுல் பண்டார எனும் கடற்படை வீரர் வாக்குமூலமளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
திருமலை கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்ட்டவர்களை கொலை செய்து அவர்களது சடலத்தை கெப் வண்டி ஒன்றில் முகாமுக்கு வெளியே எடுத்து செல்வதை தான் அவதானித்ததாக கப்டன் வெலகெதர என்ற பிரதான சாட்சியாளர் எம்மிடம் சாட்சியம் அளித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட 10 சட்டத்தரணிகளும் இரு சந்தேகநபர்களுக்கு பிணை கோரி வாதிட்டனர்.
எனினும் சட்ட மா அதிபர் பிணை வழங்க கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
7 ஆண்டுகளுக்கு முன்னர் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் 7 வருடங்களாக இல்லை என்பது அவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவே அர்த்தம். எனவே இதற்கு பிணை வழங்க முடியாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க வாதிட்டார்.
இந்த நிலையில் பிணை தொடர்பில் ஆட்சேபனங்களை எதிர்வரும் 24ஆம் திகதி எழுத்து மூலம் மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிவான் வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்து அதுவரை விளக்கமறியலில் இருந்து வரும் இரு சந்தேகநபர்களையும் தொடர்ந்து அவ்வாறே தடுத்து வைக்க உத்தரவிட்டார்.
அத்துடன் பிணையில் உள்ள லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்கவின் பிணையை ரத்து செய்து அவரை புதிய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைப்பதா? இல்லையா? என்பதையும் அந்த திகதியில் மன்றுக்கு அறியத்தருமாறு சட்டமா அதிபருக்கு நீதிவான் பணித்துள்ளார்
Related posts:
|
|