ஓப்பரேசன் ‘யுக்தியவை நிறுத்துங்கள் – ஐ.நா.நிபுணர்கள் எச்சரிக்கை – எதிர்ப்பவர்கள் ஆதாயம் பெறுபவர்களாகவே இருப்பர் – நிறுத்த முடியாதென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு!
Tuesday, January 23rd, 2024இலங்கையின் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் ஓப்பரேசன் ‘யுக்திய’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு, சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையிலான கொள்கைகளில் கவனம் செலுத்துமாறும் அவர்கள் இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்துபவர்களும் மனித உரிமைகளுக்கு உரித்தானவர்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேநேரம் யுக்திய விசேட நடவடிக்கையை ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் இந்த நடவடிக்கையானது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் – பாதாள மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை.
அவர்களின் நடவடிக்கைகளை ஒழிப்பதே எங்களின் ஒரே இலக்கு, எவருடனும் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்
இதேவேளை இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் குற்றச் செயல்களால் ஆதாயம் அடைபவர்களாவர். போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் 65% க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதன் மூலம் போதைப்பொருள் இருப்புக்கள் கணிசமான அளவில் குறைந்துள்ளன.
மேலும் நாட்டின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முழுமையாக அகற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|