ஒருநாளைக்கு 100 ரூபா சம்பளமே : சம்பள உயர்வு என்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளது.! – முத்துசிவலிங்கம்!

மலையக தொழிலாளர்களின் சம்பள உயர்வு, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் சில மலையக அரசியல்வாதிகள் கற்பனை உலகில் சஞ்சரிக்கின்றனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஒருநாளைக்கு 100 ரூபா சம்பளமே தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதே தவிர 2500 ரூபா என்பது மிகைப்படுத்தப்பட்டதாகும் என்று குறிப்பிட்ட அவர் தேர்தலுக்கு பின்னர் ஒன்றரை வருடங்களாக அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ளோர் கற்பனை உலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் இன்று கூட்டு ஒப்பந்தம் மற்றும் 2500 ரூபா சம்பள உயர்வு தொடர்பிலும் கனவுகளிலிருந்து கொண்டு சவால் விடுக்கின்றனர்.
பெருந்தோட்ட தொழிற்துறை என்பது உற்பத்தியுடன் தொடர்புபட்டது. இன்று மத்திய கிழக்கில் தோன்றியுள்ள யுத்தச் சூழ்நிலையால் இலங்கையிலிருந்து தேயிலை கொள்வனவு செய்வது குறைந்துள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் கூறுகிறது. சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். ஆனால் அனைத்தும் தோல்வி கண்டன.எனவே சம்பள உயர்வு தொடர்பாக கையெழுத்திடப்படும் கூட்டு ஒப்பந்தமும் கையளிக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் வங்கிகளினூடாக தோட்டக் கம்பனிகளுக்கு கடனை வழங்கி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க சம்மதித்தது. இதற்கமைய தொழிலாளர்கள் வேலைக்கு சமுகமளித்தால் மட்டும் ஒரு நாளைக்கு 100 வீதம் சம்பளம் அதிகமாக வழங்கப்படும்.
எனவே 2500 ரூபா சம்பள உயர்வு என்பது மிகைப்படுத்தப்பட்டதாகும். எதிர்வரும் நாட்களில் மூன்று திட்ட வரைபுகள் அடிப்படையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இ.தொ.கா. பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது என்றும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|