ஐ.நாவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?

Friday, July 22nd, 2016
ஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலர் யார் என்பதை தெரிவு செயவதற்கான இரகசிய வாக்கெடுப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதுஇதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் இப்பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி-மூன் அவர்களின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில், அடுத்த பொதுச் செயலாளரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளின்படி, பாதுகாப்புச் சபை பரிந்துரையின் அடிப்படையில், 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு ஐ.நா. பொதுச் செயலாளரை தெரிவு செய்யும்.

அவ்வாறு தெரிவு செய்யும் பொதுச்செயலாளரை ஏற்க மறுக்கும் அதிகாரம் பாதுகாப்புச் சபையிலுள்ள நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு.விதிமுறைகளில் இல்லாவிட்டாலும், உலகின் அனைத்துப் பிராந்தியத்தினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், சுழற்சி முறையில் ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்தவரும் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.

அந்த வகையில், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளனர். இந்நிலையில், பான் கி-மூனுக்கு அடுத்ததாக தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அடுத்த பொதுச் செயலாளராக வேண்டும் என்று ரஷ்யா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

எனினும், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இதுவரை ஒரு பெண் நியமிக்கப்பட்டதில்லை என்பதால், பெண் ஒருவர் தான் அடுத்த பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட வேண்டும் என 56 உறுப்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இதுதொடர்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில் 12 பேர் போட்டியிட்டனர். இதில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு பேர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். இருவர் தென் அமெரிக்காவையும், ஒருவர் மேற்கு ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டியில், இதுவரை இல்லாத வகையில் வெளிப்படைத் தன்மை அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்முறையாக ஐ.நா. பொதுக் குழு உறுப்பினர்கள், தூதர்கள், செய்தியாளர்கள் முன்னிலையில் தாங்கள் ஏன் பொதுச் செயலாளராக வர விரும்புகிறோம் என விளக்கம் அளித்துள்ளனர். மேலும் பாதுகாப்புக் சபை உறுப்பினர்கள் முன்னிலையிலும் போட்டியாளர்கள் தனித்தனியாக “நேர்காணலில்’ கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: