ஐ.எஸ் தொடர்பில் புலனாய்வு பிரிவு அதிக கவனம் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் !

ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து கொள்ளும் நபர்கள் இலங்கையை அடித்தளமாக பயன்படுத்துவது குறித்து வெளிவரும் செய்திகளை சாதாரணமாக கருத முடியாது எனவும் இது தொடர்பில் உள்நாட்டிலும் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
புலனாய்வு பிரிவை மேலும் பலப்படுத்தும் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் பரவிவரும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பில் இணைய முயற்சிக்கும் தெற்காசியர்கள் தமது பயணப்பாதையாக இலங்கையில் யாழ்ப்பாணத்தை பயன்படுத்தி வருவதாக இந்திய புலனாய்வுபிரிவு மற்றும் இந்தியாவில் இயங்கிவரும் முக்கிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன குறிப்பிடுகையில் –
மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொள்ளும் வகையில் ஆசிய நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் பயனிக்கின்றமை தொடர்ச்சியாக ஆசிய நாடுகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்திகள் தொடர்ச்சியாக இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தகவல்களை தந்த வண்ணமே உள்ளன. இப்போதும் யாழ்பாணம் பாதையை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கையை பொறுத்தவரையில் அச்சுறுத்தலான வகையில் அல்லது இவ்வாறான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இலங்கை மக்கள் செயற்படவில்லை என்பது உறுதியாக தெரிவிக்க முடியும்.
எமது புலனாய்வு பிரிவினர் இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடனும் அவதானத்துடனும் செயற்பட்டு வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் தேசிய பாதுகாப்பை சீரழிக்கும் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான வகையில் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அலட்சியமாக செயற்பட முடியாது. மேலும் கடந்த காலத்திலும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கூட்டணியில் இலங்கையை சேர்ந்த நபர்கள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இப்போதும் புலனாய்வு பிரிவின் தகவல்கள் அவ்வாறு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. தேசிய பாதுகாப்பை பலபடுத்த சகல அதிகாரங்களையும் ஜனாதிபதி எமக்கு கொடுத்துள்ளார். தேவையான சந்தர்ப்பத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டை பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.
இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கருத்து தெரிவித்தபோது இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச நாடுகளின் புலனாய்வு தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. பயங்கரவாத சூழலில் இருந்து விடுபட்ட எமது நாட்டில் மீண்டும் எந்த வகையிலேனும் அச்சுறுத்தல் ஏற்படுவதை மக்கள் எவரும் விரும்பப்போவதில்லை. அதேபோல் எமது பாதுகாப்பு தரப்பினருக்கு பயங்கரவாத சூழல் தொடர்பில் அனுபவம் உள்ளது. ஆகவே நிலைமைகளை சரியாக கையாள முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையை சேர்ந்த 45 பேர் இரகசியமாக சிரியாவை சென்றடைந்துள்ளனர். அவர்களில் பலர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றன. அதில் இருந்து தொடர்ச்சியாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஊடுருவல் இலங்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறு இருப்பினும் எமது பாதுகாப்பு எப்போதும் பலமாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இராணுவ பேச்சாளர் பிரிகெடியர் ஜயநாத் ஜயவீர தகவல் தருகையில் மேற்கத்தேய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத செயற்பாடுகள் அதிகரித்து வருவதைப்போல இன்று தற்போது ஆசிய நாடுகளிலும் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருகின்றது. இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இலங்கையில் அவ்வாறு எதுவும் அடையாளம் காணப்படவில்லை. எமது புலனாய்வு பிரிவினர் மிகவும் துல்லியமாக இந்த விடயங்கள் தொடர்பில் அவதானித்து வருகின்றனர். அது தவிர்ந்து எமது பாதுகாப்பு நடவடிக்களை பலமாகவே உள்ளன என்றார்.
Related posts:
|
|