ஏப்ரல் 21 தற்கொலை குண்டுதாரி உயிருடன் இருப்பதாக தகவல்…!

Saturday, March 14th, 2020

ஏப்ரல் 21 குண்டுதாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹசிமுடன் தற்கொலை குண்டு தாக்குதலுக்காக சத்தியபிரமாணம் மேற்கொண்டவர்களில் ஒருவர் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாகவும் அவர் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்கள செயற்பாட்டு பணியகத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் சுகத் அமரசிங்க வழங்கிய சாட்சியத்தின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அவர், கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த பிரதான அதிகாரியாவார்.

குறித்த தாக்குதலின் பின்னர் முற்பகல் 10.45 மணியளவில் கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்ற தமக்கு தற்கொலை குண்டை வெடிக்க வைத்த சந்தேகத்திற்குரியவரின் தலை பகுதி தேவாலயத்தின் கதிரையில் இருந்தமையை அவதானித்ததாக குறிப்பிட்டார்.

குண்டுதாரி, ஹஸ்துன் என அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய 2019 ஆம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி தாம் ஹஸ்துன் என்பவரின் பெற்றோர் வசித்த வாழைச்சேனை பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றதாகவும், இதன்போது அவரின் தந்தை, தாய் மற்றும் சகோதரரின் மரபு அணு, தற்கொலை குண்டுதாரியின் தலை பகுதியின் மரபணு மாதிரியுடன் ஒத்திசைந்ததாக தமது விசாரணைகளில் தெரியவந்ததாக பிரதாக காவல்துறை பரிசோதகர் சுகத் அமரசிங்க, ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மொஹமட் முபாராக் என்பவர் கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் உள்ள டொன் டேவிட் மாவத்தையில் வாடகை அடிப்படையில் வீடொன்றை பெற்றுள்ளதாக காவல்துறை பரிசோதகர் சாட்சியளித்துள்ளார்.

ஹஸ்துடன் என்ற குண்டுதாரி அந்த வீட்டில் தங்கியிருந்தமையை தாம் சி.சி.டி.வி கமரா காட்சிகள் மூலம் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: