எவர் மீதும் வழக்கு தொடரலாம் – பிரதமர்!
Tuesday, November 22nd, 2016
திறைசேரி முறி விவகாரம் தொடர்பில் எனது பொறுப்பை செய்துவிட்டதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் வேறுயாருக்கு எதிராகவாவது வழக்கு தொடர வேண்டுமானால் அதனை செய்யலாம். இதில் தனது தலையீடு இருக்காதென பிரதமர் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் பொருத்தமாக இல்லாவிட்டால் தனியார் சட்டத்தரணி ஒருவரையோ சரத் என் சில்வா, மொஹான் பீரிஸ் போன்ற ஒருவரையோ முன்னிறுத்தி எதிரணி கோப் அறிக்கை தொடர்பில் விசாரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் அபிவிருத்தி தொடர்பான விசேட நடவடிக்கை தொடர்பில் சட்ட மூலம் தயாரிக்கப்படுகிறது.
இதனூடாக பிராந்திய அபிவிருத்தி சபைகளினூடாக மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சகல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்படும் நிதி திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதி, எம்.பி.களுக்கு ஒதுக்கும் நிதி என்பவற்றை உள்ளடக்கி 3 வருட திட்டம் தயாரிக்கப்படும்.
மாவட்ட அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்க சகல எம்.பிகளும் பங்களிப்பு வழங்க வேண்டும்.யாப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது.
அமைச்சரவை சார்பில் குறித்த அமைச்சே பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறுகிறது.நாட்டில் பாரிய கடன் சுமை காணப்படுகிறது. 2019, 2020, 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் பெருந்தொகை கடன் செலுத்த நேரிடும்.
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப குழு ஒவ்வொரு வாரமும் கூடி கடனை மீள செலுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது. நாம் இந்த பாரிய கடன் சுமையிலிருந்து மீள வேண்டும். அபிவிருத்தி செயற்பாடுகளில் கடந்த அரசாங்கம் ஆரம்பித்த திட்டங்களையும் உள்வாங்கி முன்னெடுத்து வருகிறோம். துறைமுக நகரை விட நிதி நகரம் முக்கியமானது. அதிலுள்ள குறைபாடுகளை திருத்தி அதனை முன்னெடுத்து இருக்கிறோம்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் என்பவற்றினால் எந்தப் பயனும் இருக்கவில்லை. ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி தொடர்பில் சமல் ராஜபக்ஷவுடன் பேசினோம். நாமல் ராஜபக்ஷவுக்கும் இதில் தொடர்புபட முடியும். பொருளாதார வளர்ச்சி வீதத்தை 7 வீதமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
13 வருட கல்வியை சட்டமாக்கியுள்ளோம். வறிய மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை. உயர்தர பாடவிதானங்களில் மாற்றம் செய்ய வேண்டும் தொழிற்சந்தைக்கும் கல்விச் சந்தைக்கும் இடையில் இடைவெளி காணப்படுகிறது. நிர்மாணத்துறையில் 4 இலட்சம் வெற்றிடம் காணப்படுகிறது.
விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய வேண்டும். வங்கிகள் கடன் வழங்கும் செயற்பாடு தொடர்பில் திருப்தி கிடையாது. கடன் வழங்கல் செயற்பாடு தொடர்பில் அமைச்சரவை குழு ஆராய்ந்து வருகிறது.
வேறு நாடுகளில் கடன் வழங்கும் நடவடிக்கை மத்திய வங்கியினூடாக அன்றி தனியான நிறுவனத்தினூடாகவே மேற்கொள்ளப்படுகிறது. நிதி கட்டுப்பாடு தான் மத்திய வங்கியின் பலமாகும். வங்கிகளை மேற்பார்வை செய்யும் செயற்பாடும் மேற்கொள்ளப்படுகிறது.
கடன் செலுத்துவது தொடர்பில் மத்திய வங்கி செயற்படுவது கஷ்டமாகும். எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.திறைசேறி முறி விவகாரம் வெளியில் வந்தவுடன் ஒரு வருடத்துக்கு முன்னர் இது தொடர்பில் குழு அமைத்து ஆராய்ந்தேன். ஆனால் ஹெட்ஜிம் ஒப்பந்தம். கீரிக் முறி விவகாரம் என பல்வேறு மோசடிகள் தொடர்பில் இன்னும் விசாரணை இடம்பெறவில்லை.
திறைசேரி முறி விவகாரம் தொடர்பில் கோப் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. இதனை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்வைத்துள்ளோம்.
எமது சிறப்புரிமை விவகாரம் தவிர சகல விடயங்கள் தொடர்பிலும் சட்டமாஅதிபர் திணைக்களத்திடமே ஆலோசனை பெறுகிறோம்.
சபாநாயகரின் ஆலோசனையைப் பெற்று தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அவர் சபாநாயகரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த கோப் குழு பாராளுமன்றம் நியமித்த குழு. எமது அமைச்சு தொடர்பான குழு அல்ல இக்குழு சட்டமா அதிபர் பொருத்தமாக இல்லாவிட்டால் தனிப்பட்ட சட்டத் தரணியை நிறுத்த முடியும். நான் எனது பொறுப்பை செய்து விட்டேன். இங்கிலாந்தில் இருந்து வேண்டுமானாலும் சட்டத்தரணியை கொண்டு வாருங்கள்.
ஆனால் சட்டமா அதிபரினால் தான் வழக்கு தொடர முடியும். சட்டமா அதிபர் தேவையில்லாவிட்டால் வேறு ஒருவரை வைத்து இதனை செய்யுங்கள் சபாநாயகருக்கு இது தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
37 கோப் அறிக்கைகள் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்டன. எனது அமைச்சு தொடர்பான விவகாரம் என்பதால் இது தொடர்பில் முதலில் விசாரணை நடத்துமாறு அறிவித்திருந்தேன்.சட்டமா அதிபர் சரியில்லாவிட்டால் சரத் என் சில்வாவையோ மொஹான் பீரிஸையோ நியமிக்குமாறு கோருங்கள். யாருக்கு எதிராக வழக்கு தொடர்வது என சட்டமா அதிபர் முடிவு செய்வார்.
உங்களுக்கு வேறு யாரையாவது நியமிக்க வேண்டுமானால் கட்சி தலைவர் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கலாம். அது வரை சட்டமா அதிபர் சபாநாயகருடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.
பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில் எனது பொறுப்பை செய்துள்ளேன். இந்த பணியை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும். சட்ட ரீதியாக யார் பொறுப்பு கூற வேண்டும் என்பது தெளிவாகும்.கீரிக் முறி, ஹெட்ஜிம் மோசடி குறித்து விசாரித்து வருகிறோம். தனிப்பட்ட முறி கள் அனுமதியின்றியே வழங்கப்பட்டன.
Related posts:
|
|