எமது சமயத்தில் பொதுச் சேவைகளை ஆற்றுவதற்கு பொது நிதியமொன்றை உருவாக்க வேண்டும் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்
Tuesday, May 17th, 2016யாழ். குடாநாட்டின் பல ஆலயங்களில் உள்ள நிர்வாகங்கள் எந்தவொரு கணக்குகளையும் வெளிக் காட்டுவதில்லை. அவர்களிடம் வெளிப்படைத் தன்மை எதுவுமில்லை. ஆகவே , ஆலயங்கள் தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பது தொடர்பில் நாங்கள் இந்துசமயப் பேரவையுடனும், வேறு சமய நிறுவனங்கள் சிலவற்றுடனும் கதைத்திருக்கிறோம் . ஆலயம் தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நீதிமன்றங்களை நாடிச் செல்வதைத் தவிர்த்து இதற்காகச் செலவிடப்படும் நிதிகளைப் பொதுச் சேவைகளுக்குப் பயன்படுத்துவது நன்மையளிக்கும். வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணமிருக்கிறது. ஆனால், எந்த அமைப்பினூடாகச் செய்ய வேண்டுமென்பதில் தெளிவின்மை காணப்படுகிறது . ஆகவே, எமது சமயத்தில் பொதுச் சேவைகளை ஆற்றுவதற்கெனப் பொதுநிதியமொன்றை நாமனைவரும் இணைந்து உருவாக்குவது மிகவும் பயனுடையதாகவிருக்கும் எனத் தெரிவித்தார் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் .
‘இந்து சமயப் பேரவையின் திருமுறை விழா’ கடந்த ஞாயிற்றுக்கிழமை (15-05-2016) காலை – 8.30 மணி முதல் நல்லூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராசா பரமேஸ்வரி மண்டபத்தில் காலை , மாலை என இரு அமர்வுகளாக இடம்பெற்றது . காலை அமர்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
யாழ். குடாநாட்டிலே ஒவ்வொரு ஆலயங்களும் அறநெறி வகுப்புக்களை நடாத்த வேண்டும் என்ற நோக்கிலே நாங்கல் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் . எமது நடவடிக்கைகள் நூறு வீதம் வெற்றியளிக்காவிட்டாலும் கூட குறிப்பிட்டளவு வெற்றியை அளித்துள்ளது . அறநெறி வகுப்புக்களில் திருமுறை ஓதுதலையும் இணைத்துக் கொள்ள வேண்டுமெனப் பலரும் எங்களிடம் கேட்டிருக்கிறார்கள் . ஆகவே , அறநெறி வகுப்புக்களில் ஒரு அங்கமாகத் திருமுறை ஓதுதலும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் .
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் காலம் சென்ற தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தலைவராக விளங்கிய காலகட்டத்தில் ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைக்கும் வகையில் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தை உருவாக்கினார் . அதனுடைய செயற்பாடுகள் காலத்தின் தேவையை உணர்ந்து தற்போதும் சிறப்பான வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், எமது சமூதாயத்திலுள்ள சில ஆலயங்கள் சிறு சிறு சமூகப் பணிகளைச் செய்தாலும் பல ஆலயங்கள் சமூகப் பணிகளில் ஈடுபடுவதில்லை. இது எம்மத்தியிலுள்ள பெரும் குறைபாடாகும். யாழ்.குடாநாட்டிலுள்ள பல பிள்ளைகள் வறுமை காரணமாகத் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலைமையிலுள்ளனர் . ஆகவே, எங்கள் ஊரிலுள்ள ஒவ்வொரு ஆலயங்களும் எதிர்காலத் தலைவர்களான மாணவ சமூதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவ முன்வரவேண்டும் .
தற்போது யாழ். குடாநாட்டிலுள்ள பல ஆலயங்களின் பிணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளுடன் தினமும் என்னிடம் பலரும் வருகிறார்கள் . கடந்த வெள்ளிக் கிழமையும் தமது ஆலயங்கள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்க வேண்டுமெனக் கேட்டு மூன்று ஆலய நிர்வாகிகள் என்னை நாடி வந்தார்கள் . நான், அவர்களிடம் உங்களுடன் கதைத்துக் கொண்டிருந்தால் என்னால் வேறு வேலைகள் எதுவும் செய்ய முடியாது . உங்கள் பிணக்குகளைத் தீர்ப்பதற்கென இன்னொரு அரசாங்க அதிபர் தான் நியமிக்கப்பட வேண்டுமெனக் கூறினேன் . அந்தளவுக்கு மிகவும் மோசமான நிலையில் ஆலயம் தொடர்பான பிணக்குகளுடன் அவர்கள் என்னை நாடி வருகிறார்கள்.
எங்களுடைய சமயம் ‘அன்பே சிவம்’ எனக் கூறுகின்றது . ஆனால், நாங்கள் அன்பற்றவர்களாகவும் , பண்பற்றவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருப்பது வெட்கக்க் கேடான செயல். ஆலயங்களில் இத்தகைய பிணக்குகள் இடம்பெறுவது எமது சமயத்துக்கே ஏற்பட்ட இழுக்கு எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .
Related posts:
|
|