எப்பாவல அரச பொஸ்பேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ இயற்கையானதல்ல- பகுப்பாய்வு அறிக்கை மூலம் உறுதி!

எப்பாவல, அரச பொஸ்பேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து இயற்கையானது அல்ல என்று அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
ஏதாவது ஒரு வகையான எரிபொருள் பயன்படுத்தப்பட்டதன் மூலம் இந்த தீ ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் மேலதிக பகுப்பாய்வாளர் ஆரியநந்த வெலியங்கேவினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி எப்பாவல, அரச பொஸ்பேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், விநியோக பிரிவு, கணக்காய்வு பிரிவு மற்றும் ஆவண காப்பகங்கள் மற்றும் ஊழியர் ஓய்வு பகுதி என்பன முழுமையாக எரிந்து நாசமாகின.
நிறுவனத்தின் முக்கியமான பல ஆவணங்கள் அழிவடைந்த இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள இவ் அறிக்கையின் படி, எப்பாவல, அரச பொஸ்பேட் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகளை மறைப்பதற்காக யாராவது ஒரு தனிநபர் அல்லது குழுவினரால் குறித்த ஆவணங்களை அழிக்கும் நோக்கில் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று அநுராதபுரம் வலய குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தீப்பரவல் சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் ஊழியர்கள் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் அநுராதபுரம் வலய குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றன.
Related posts:
|
|