எனது கொள்கையை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்பாடுகள் அனைத்தம் முன்னெடுக்கப்படுகின்றன – விசேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச எனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஆற்றிய விசேட உரையின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விசேட உரையின்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேர்தலில் நான் வெற்றி பெற்ற பின்னர் என்னிடம் முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதற்காகவே அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக சிலர் மக்களிடம் காண்பிக்க முயற்சிக்கின்றனர்.

எத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் நாட்டுக்கான எனது கொள்கையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் எனக்கு வாக்களித்த 69 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டுமென்பதாகவே காணப்பட்டது. மக்களின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து இன மற்றும் மதத்தவர்களும், தமது தனித்துவங்களைப் பாதுகாத்து ஏனையோருக்கு பாதிப்பின்றி, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான அமைதியான சூழலை, இந்தக் குறுகிய காலத்தில் கட்டியெழுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும்

கொரோனா நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை அரசாங்கம் 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் நிவாரணத்திற்காக செலவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய நிலையில் தனது மக்களுக்காக எந்தவித தடுப்பூசியையும் பெற்றுக் கொடுக்க முடியாத நாடுகள் கூட உள்ளன. தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதில் நான் விசேட ஆர்வம் காட்டினேன்.

அத்துடன் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நாட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன் மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தனர். எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் கடமைப்பட்டுள்ளேன்.

“கொவிட் பரவலை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடு விதித்து, சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறு மக்களுக்கு எவ்வளவு அறிவுறுத்தப்பட்டாலும், சில பொது மக்கள் அதை கடைப்பிடிக்கவில்லை என்றும் ஜனாதிபதி குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் கொழும்பு துறைமுக நகரத்தின் புதிதாக சேர்க்கப்பட்ட 269 ஹெக்டேருக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு தற்போது எழுந்துள்ளது.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, 100% இலங்கையர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழுவை நியமித்தேன்.

முதலாவது முதலீடாக 400 மில்லியன் டொலர் முதலீட்டில் இரண்டு கோபுரங்களுடன் கூடிய வர்த்தக கட்டிடத்திற்கு அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ”

நான் எப்போதும் ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுகின்றேன். எதிர்காலத்துக்கான திட்டத்தை வகுக்கும் போது, நாம் கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது. அத்துடன், தற்காலத்தைப் பற்றியும் மிகச்சரியாக ஆராய்ந்து விளங்கிக்கொள்வது முக்கியமானதாகும்.

அதேநேரம் கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல தீர்மானங்கள் காரணமாக, எமது புலனாய்வுத்துறை மிகவும் பலவீனப்பட்டிருந்தது. ஆனாலும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த பாதுகாப்புத் துறையினரின் மனநிலையை, நாம் மீண்டும் பலப்படுத்தியுள்ளோம்.  .

அதேபோன்று நாட்டுக்குப் பெரும் சவாலாக மாறியிருந்த பாதாள உலகக் கோஷ்டிகளை, வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளோம். எமது பாரம்பரியம், எமது கலாசாரம், தேசியம் என்பவற்றைப் பற்றி கதைப்பது இழிவாக கருதப்பட்டு வந்த யுகத்தை நாம் கடந்து வந்துள்ளோம். அந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கிறோம்.

அனைத்து இனத்தவர்களும் அனைத்து மதத்தவர்களும், தமது தனித்துவங்களைப் பாதுகாத்து, அடுத்தவருக்குப் பாதிப்பின்றி, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான அமைதியான சூழலை, இந்தக் குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.

இதேவேளை வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே, எமது மற்றமொரு முக்கிய சவாலாக இருந்தது. இதற்கான சிறந்த திட்டத்தை நாம் முன்வைத்திருக்கிறோம். கடந்த ஒன்றரை வருட குறுகிய காலப்பகுதியில், நாம் முகங்கொடுத்த முக்கிய சவால்கள், அவற்றை நாம் எதிர்கொண்ட விதம் பற்றி மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

2015 ஆம் ஆண்டில் உருவான புதிய அரசாங்கத்திடம் இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கையளிக்கும் போது, எம்மிடம் பலமானதொரு பொருளாதாரம் இருந்தது. சுமார் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன். ஆசியாவிலேயே சீனாவுக்கு அடுத்த நிலையில் நாம் இருந்தோம்.

ஆனால் கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில், இந்த நாட்டில் எந்தவோர் இயற்கை அனர்த்தமும் ஏற்படவில்லை. என்றாலும், அப்போதைய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக, எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

2019ஆம் ஆண்டாகும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 2.1 சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. அரசுக் கடன் 7,400 பில்லியன் ரூபாவில் இருந்து 13,000 பில்லியன் ரூபாய் வரை அதிகரித்துக் காணப்பட்டது. மக்கள் மீதான வரிச்சுமை, இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டது.ஏற்றுமதி வருமானம் குறைந்து, வெளிநாட்டு இருப்பும் பலவீனமடைந்திருந்தது.

இவ்வாறு வீழ்ச்சி கண்டிருந்த ஒரு பொருளாதாரத்துடன் தான், நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன். என்றாலும், அந்த யதார்த்தத்தை மிகச் சரியாக விளங்கிக்கொண்டு, முறையானதொரு திட்டத்துடன் தான் நாம் அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்தோம்.

நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்கு முன்னர், கொவிட் 19 தொற்று சீனாவில் ஆரம்பித்து, முழு உலகிலும் பரவத் தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தில், இந்நோய் பற்றிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கத் தேவையான அறிவு, எந்தவொரு நாட்டிடமும் இருக்கவில்லை. உலகச் சுகாதார ஸ்தாபனமும், இதனை வியப்புடனேயே பார்த்தது.

எமது அபிவிருத்தித் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது, நிர்மாணத் துறையாகும். வீழ்ச்சியடைந்திருந்த நிர்மாணத் தொழிற்றுறைக்கு புத்துயிர் அளித்து, மீண்டும் அதனை முன்னேற்ற வேண்டும் என்றே நாம் எதிர்பார்த்தோம்.

இந்த அனைத்துக் காரணங்களினாலும், நாம் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த அந்நியச் செலாவணியின் அளவு, எமக்குக் கிடைக்காமல் போயுள்ளது. இத்தகையதொரு நிலைமையின் கீழ், நாம் அந்நியச் செலாவணியை மிகவும் முறையாக முகாமைத்துவம் செய்யவேண்டி இருக்கின்றது.

அதேநேரம் மக்கள் மத்தியில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாகனங்களைக் குத்தகைக்கு பெற்றவர்கள், அவற்றுக்கான தவணைப் பணத்தைச் செலுத்த முடியாமல் உள்ளனர். வீட்டுக் கடன் பெற்றவர்களால், அந்தக் கடன் தவணையைச் செலுத்த முடியாமல் போயுள்ளது. தினசரி கடன் பெற்று வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இல்லாமல் போனதால், பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

இந்த நிலைமைகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக, அவர்களின் கடன்களை செலுத்துவதற்கான மேலதிக காலத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில், சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்றுறையினருக்குக் கடன் தவணை வசதியை வழங்குவதற்காக, அரசாங்கம் 400 பில்லியன் ரூபாய்கும் அதிக நிதியை ஒதுக்கியது.

நாம் முன்னெடுக்கின்றன அபிவிருத்திப் பணிகள், உரிய முறையில் மக்களிடம் சென்றடையவில்லை என்பது, எமது அரசாங்கத்தின் குறைபாடாக இருந்துவருகிறது. இதன் விளைவு, ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் பிரச்சினைகளை மாத்திரமே மக்கள் பார்த்தனர்.

விவசாயத்துக்கு உரிய கௌரவத்தை வழங்கியதன் காரணமாக, முன்பு விவசாயத் துறையில் அக்கறை காட்டாத பலர், இன்று பல்வேறு மட்டங்களில் விவசாயத் திட்டங்களுக்கு மாறியிருக்கிறார்கள். விவசாயத்துறையைக் கட்டியெழுப்புவதற்காக, நாம் நாடளாவிய ரீதியில் 14,000 குளங்களை புனர்நிர்மாணம் செய்கின்ற பாரிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதனூடாக, கைவிடப்பட்டிருந்த நெல் வயல்கள் மற்றும் தரிசு நிலங்களாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்ச் செய்கை செய்யப்படும் சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு உறுதியாக முகங்கொடுக்கக்கூடிய, பேண்தகு அபிவிருத்திக் கொள்கை ஒன்றுக்காக, நாம் முக்கியமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

நாட்டில் இரசாயன உர இறக்குமதியை முற்றாகத் தடை செய்வது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம், இதில் ஒரு முக்கிய தீர்மானமாகும். இந்த விடயம் தொடர்பில் பல தசாப்தங்கள் எமது நாட்டில் பேசுபொருளாக இருந்து வந்திருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து இரசாயன உரம் கொண்டுவரப்படுவதை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம், ஓர் அவசரத் தீர்மானம் அல்ல. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, எதிர்வரவுள்ள போகத்துக்குத் தேவையான உரம் இந்த நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாம் தற்போது முறையாக சேதனப் பசளைப் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். ஒரு தேசம் என்ற வகையில் ஒன்றுபட்டு, இதற்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும். சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம், நீண்டகால நன்மைகளை நாடு என்ற வகையில் நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும் என்று உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்கள் கூறுகின்றார்கள். மண் வளம்பெறுவது, வினைத்திறன் அதிகரிப்பது, அதிக வருமானம், விவசாய உற்பத்திக்கு அதிக சந்தை வாய்ப்பைப் பெற்றுக்கொள்வது போன்று, மக்களின் ஆரோக்கியமும் எமக்குக் கிடைக்கின்ற பெறுபேறுகள் ஆகும்.

மனிதன் இயற்கைச் சூழலுக்கு ஏற்படுத்தும் வெளி அழுத்தங்களை நிறுத்தினால், மிக விரைவாக அவனுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீர்வு வழங்க, சுற்றாடலினால் முடியுமாக இருக்கும்.

இரசாயன உரம் இல்லாமல் விவசாயத்தை முன்னேற்ற முடியாது என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றவர்கள், இந்தத் தீர்மானம் காரணமாகக் கிடைக்கும் நீண்டகாலப் பொருளாதார நன்மைகளை எதிர்காலத்தில் தெளிவாக விளங்கிக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: