எதிர்வரும் திங்கள்முதல் கொழும்பில் அமுலாகும் புதிய சட்டம் – மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம் – பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன அறிவிப்பு!

Thursday, September 17th, 2020

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய சாலை விதிகள் எதிரவரும் 21ஆம் திகதிமுதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் குறித்து சாரதிகளுக்கு தெளிவுப்படுத்துவதற்கான ஆராய்ச்சி கட்டம் தற்போது நடந்து வருவதாகவும், அடுத்த இரண்டு நாட்களிலும் ஒத்திகை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் கொழும்பு மாவட்டத்தில் இந்த வழிப்பாதை சட்டம் செயல்படுத்தப்படும் என்றும், சாரதிகள் இந்தச் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை மீறும் சாரிதிகளுக்கு 2,000 ரூபா அபராதம் அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், பயணத்தை எளிதாக்குவதற்கும் பொலிஸாருக்கு உதவுமாறு அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சாலையின் இடது பாதையை மட்டுமே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு பயன்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

ஆரம்ப நாட்களில் ஒத்திகைக்கு சில போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும், சாரதிகள் மாற்றத்துடன் பழகியவுடன் நகரத்தில் நெரிசலைக் குறைக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது