எங்களுடைய சமுதாயம் ஒரு பிறழ்வு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது – பல்கலை துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்!

எங்களுடைய சமுதாயம் ஒரு பிறழ்வு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலைமையை மாற்றி மீண்டும் எமது சமூதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு எங்கள் பாரம்பரியப் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் சமயம் மூலமாகப் போதிப்பது அவசியம் எனத் யாழ்.பல்கலைக் கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்
பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் எழுதிய ‘சமய வாழ்வியல்’ நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(13) யாழ். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தங்களுடைய வாழ்க்கையையே சமயத்திற்காக அர்ப்பணித்த பெருமகன்கள் எம்மத்தியிலிருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையிலே சமய விழுமியங்களைக் கடைப்பிடிப்பவர்களும் எம்மத்தியிலிருக்கிறார்கள். எங்களுடைய சிறுவயதில் எங்கள் வீடுகளில் காணப்பட்ட சமயப் பழக்க வழக்கங்களைத் தற்போது காண்பது அபூர்வமாகவுள்ளது.
இன்றைய காலத்தில் எமது பாரம்பரிய சமய மரபு மருவியுள்ளமைக்கான காரணம் என்ன? அது சரியானதா? தவறானதா? போன்ற விடயங்களைத் தர்க்க ரீதியாக முன்வைத்து எமது மண்ணின் ஆன்மீகப் பெரியோர்கள் சில நூல்களை வெளியிட வேண்டும். முன்னைய காலத்தில் நாங்கள் எங்கள் பேரன், பேர்த்திகளுடன் ஆலயங்களுக்குச் சென்ற போதிருந்த நடைமுறைகளும், தற்போது ஆலயங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளிலும் பெரும் வித்தியாசத்தைக் காண முடிகிறது. எங்களுடைய வழிபாட்டு முறைகளிலும் தற்போது பாரியளவிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன என்றார்.
Related posts:
|
|