உறவுகளைத் தேடியே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிக முறைப்பாடு – அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர்!
Monday, February 13th, 2017
எதிர்வரும் 17 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களை வழங்கும் 1500 அதிகாரிகளை கொழும்பு அலரிமாளிகையில் சந்திக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் வளவாளர்களால் கொழும்பிலுள்ள தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் பயிற்றுவிக்கப்பட்ட போதே, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறியும் சட்டம் கடந்த 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அரச தகவல் திணைக்களத்திற்கு கிடைத்திருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இவற்றில் 400 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வவுனியாவில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் காணாமல் போன தமது உறவுகள் எங்கே என்று கோரிய விண்ணப்பங்களே அதிகளவில் கிடைக்கப்பெற்றள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முதலாவது நாளில் 300 க்கும் மேற்பட்ட தகவல் அறியும் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி தகவல் அறியும் உரிமை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு உறுதியான முடிவை அரசாங்கம் எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலின்படி கடந்த ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி சபாநாயகரினால் கைச்சாத்திட்டப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் நடைமுறைப்படுத்த இருந்த போதிலும் 6 மாதத்திற்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் அதனை விரிவாக முன்னெடுக்கும் பணி மாத்திரமே அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு இருப்பதாகவும் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ள போதிலும், முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ரங்ககலன்சூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காணாமல் போனோர் தமது உறவினர்களை கண்டறிய வேண்டும் எனக் கோருவதாகவும் எனினும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் காணாமல் போனவர்களைக் கண்டறிவது கடினம் என்றும் தகவல் அறியும் உரிமை தொடர்பான கருத்துரைகளை சட்டத்தரணி ஜெகத் லியன ஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான அதிகாரம் தங்களிடம் இல்லை என்றும் காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் மூலமே கண்டறிய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்மையே காணாமல் போன தம் உறவினர்களை தேடித் தருமாறு தங்களுக்கு அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளுக்கிடையில் தகவல் அறியும் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம் மூன்றாவது சிறந்த தகவல் அறியும்சட்டமாகக் கண்டறியப்பட்டுள்ளது
Related posts:
|
|