உர மானியக் கொடுப்பனவு: 4 மாவட்டங்களுக்கு அனுமதி!
Friday, December 16th, 2016
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மானிய உரத்துக்குப் பதிலான பணக் கொடுப்பனவுப் பட்டியல் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
விவசாயிகளுக்கு மானிய உரம் இதுவரை காலமும் வழங்கப்பட்டது. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. மானிய உரத்துக்குப் பதிலாக ஏக்கருக்கு 5ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. ஒரு விவசாயி அதி உச்சமாக 5ஏக்கருக்கு மானிய உரப் பணத்தைக் கோர முடியும். இந்த நடைமுறை பின்பற்றத் தொடங்கியதன் பின்னரான காலபோக நெற்செய்கை தற்போதே மேற்கொள்ளப்படுகின்றது.
புதிய நடைமுறையின் கீழான பண விநியோகத்துக்காக சகல மாவட்டங்களிலும் உள்ள கமநல சேவை நிலையங்கள் ஊடாகத் தகவல்கள், பெரும்பாக உத்தியோகத்தர்களால் திரட்டப்பட்டது. சகல மாவட்டங்களினதும் பட்டியல் கமநல சேவைகள் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. பெயர் பட்டியல் சீர் செய்யப்பட்டு 4 மாவட்டங்களின் கொடுப்பனவு முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அனுமதிப் பட்டியலில் யாழ்ப்பாணம், கினிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் உள்ளடங்கியுள்ளன. கொடுப்பனவுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன எனத் தெரியவகின்றது.
Related posts:
|
|