உடமைகள் மீது தாக்குதல் நடத்தியது  கண்டிக்கத்தக்கது- யாழ். இந்து.ஆசிரியர் கழகம்

Thursday, March 24th, 2016

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் உடமைகள் மீது நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது என  கல்லூரியின் ஆசிரியர் கழகம் இன்று (24) தெரிவித்துள்ளது.யாழ். இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே ஆசிரியர் கழகம் இக்கண்டனத்தை தெரிவித்தது.

இது குறித்து அக்கழகம் மேலும் கூறுகையில் கல்விப் பாரம்பரியத்தின் 125 ஆண்டுகள் கடந்தும் பல்லாயிரக்கணக்கான சமுதாய வல்லுனர்களை உருவாக்கி வருகின்ற யாழ். இந்துக் கல்லூரியில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பல வழிகளில் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த  8 ஆம் திகதி கல்லூரி அதிபரின் வீடும் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனமும்

இனந்தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டது. தற்போது புதன்கிழமை (23) கொக்குவில் பகுதியில்

உள்ள இக்கல்லூரியின் ஆசிரியர் ஒருவரது வீட்டையும் இனந்தெரியாதோர் அடித்து நொருக்கி பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.சம்பவ நேரம் குறித்த ஆசிரியர் வீட்டில் இல்லை. அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர்.

கூரிய ஆயுதங்களுடன் இத்தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இது தொடர்பான முறைபாட்டினை ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்.

குறித்த ஆசிரியர் கல்லூரியின் கற்பித்தல் செயற்பாடு மட்டுமன்றி மாணவர்களது ஒழுக்காற்று நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர்.  மாணவர்களது  ஒரு சில செயற்பாடுகள் ஆசிரியர்களால் கண்டிக்கப்படுகின்ற போது இத்தகு அச்சுறுத்தல் செயற்பாடுகளில் ஒரு சிலர் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது.ஆகவே இத்தகைய கல்விச் செயற்பாடுகளை சீரழிக்கும்முயற்சிகளை தடுத்து நிறுத்தி  சம்பந்தபட்டவர்கள் சட்டபடி தண்டிக்கப்படவேண்டும் என கல்லூரியின் ஆசிரியர் கழகத்தினர் தெரிவித்தனர்.

Related posts: