இ.போ.ச. பேருந்துச் சாரதியைத் தாக்கினர் என – தனியார் பேருந்துச் சாரதி உட்பட மூன்று பேர் கைது !

Tuesday, January 15th, 2019

அரச பேருந்துச் சாரதியைத் தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட மூவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரையும் தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பேருந்தை, மிருசுவில் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த அரச பேருந்தின் முன்னால் நிறுத்திவிட்டு இறங்கி வந்த சாரதியும் நடத்துநரும் இ.போ.ச. உங்களுக்கு சம்பளம் தருகிறது ஏன் பயணிகளை ஏற்றுகின்றீர்களெனக் கேட்டுத் தாக்கினர் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்து கொடிகாமம் பொலிஸார் அங்கு வந்து விசாரித்தபோது பயணிகளின் முறைப்பாட்டின் பிரகாரம் தனியார் பேருந்தின் சாரதி, நடத்துநர் உட்பட மூவரைக் கைது செய்ததுடன் பேருந்தினையும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மாலை சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிவான் தனியார் பேருந்தின் சாரதி, நடத்துநர் உட்பட மூவரையும் தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்து வழக்கை எதிர்வரும் ஆறாம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Related posts: