இலவச சுகாதார சேவையை பலப்படுத்த அனைவரது பங்களிப்பும் அவசியம் -ஜனாதிபதி!

Tuesday, May 23rd, 2017

நாட்டு மக்களின் இலவச சுகாதார சேவையை பலப்படுத்துவதற்கு பங்களிக்கவேண்டியது அனைவருடையவும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய போதனா வைத்தியசாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.

வைத்தியசாலையை திறந்துவைத்த ஜனாதிபதி, அங்குள்ள சிகிச்சை நிலையங்களை பார்வையிட்டதுடன், சிறுவர் வாட்டுக்கள் மற்றும் விசேட விருந்தினர் வாட்டுக்கள் தொகுதியையும் பார்வையிட்டார்.

வேரஹெர பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலை, 20 விசேட சிகிச்சை நிலையங்கள், 814 கட்டில்கள் மற்றும் நவீன உபகரணங்களைக் கொண்ட முழு நிறைவான சர்வதேச தரம்வாய்ந்த வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இச்சேவையில் உள்ளவர்களில் வருடாந்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை இதற்கு முக்கிய காரணம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்வோரை தடுத்து வைத்துக்கொள்வதற்கான வழிகள் இல்லை என்ற போதும் மக்களுக்கு இலவச சுகாதார சேவை மற்றும் இலவச கல்வியின் நன்மைகளை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் ஜே.ஜே. ரணசிங்கவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

Related posts: