இயற்கை அனர்த்தம்: நோர்வே நிதியுதவி!

Friday, June 9th, 2017

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பேரழிவை எதிர்கொண்ட மக்களுக்கான மனிதாபிமான செயற்பாடுகளுக்காக நோர்வே அரசாங்கம் 180 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பர்கே பிரெண்டே அறிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியானது, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஊடாகச் செயற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிதியை கொண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தரத்தை அதிகரித்தல், சுகாதாரத்தை மேம்படுத்தல், கிணறுகளைச் சுத்தம் செய்தல், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தேவையான அடிப்படை வாழ்வாதார வசதிகளை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதேவேளை, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகமானது தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் நோர்வே நிலவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கிடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு நிதியுதவி அளிக்கவுள்ளது.

இதன்மூலம் தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் திறன் மற்றும் நிலச்சரிவை தடுக்கும் வழிகளை அறியும் திறன் என்பன மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: