இன்று உலக காச நோய் தினம்

Thursday, March 24th, 2016

இன்று உலக காச நோய் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக இந்நாளை அனைத்துலக காச நோய் தினமாக பிரகடனப்படுத்தியது.

காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. 1982ஆம் ஆண்டில் இந்நோய் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது.

காச நோய் என்பது மைக்கோபாக்டீரியா என்னும் நுண்ணுயிரியின் தாக்குதலால் ஏற்படும் கடும் தொற்றுநோயாகும்.  தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை காசநோய்க்கான அறிகுறிகளாக இனங்காணப்பட்டுள்ளன.

நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் மூலம் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. ஆனால் இது ஒரு பரம்பரை நோய் அல்ல என்பதம் குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் 90 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே காசநோய் உள்ளவர்களிடமிருந்து பரவுகின்றது. இந்நோயால் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மேலும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 22 நாடுகளில் காசநோயால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம்.ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை மேற்கொள்வது, நீண்ட கால சிகிச்சை ஆகியவை இந்நோயிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளாகும். காச நோய் உள்ளவர்கள், தயங்காமல் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளல் ஆகியன இந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த முறையாகும்.

அவ்வகையில், அரசாங்கம் தனியார் நிறுவனங்கள் புத்திஜீவிகள் என அனைவரும் காச நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Related posts: