இனிப்பின் காலாவதி திகதியில் மோசடி – அவதானம் என அறிவுறுத்துகின்றது பாவனையாளர் அதிகாரசபை!

Thursday, November 17th, 2016

குழந்தைகள் உண்ணும் சீரக இனிப்புப் போத்தலில் இரு உற்பத்தித் திகதிகள், காலாவதித் திகதிகள் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றைக் கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள், பொதுமக்கள், அவதானத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான இனிப்புப் போத்தல்களது கலாவதித் திகதி நாளை மறுதினத்துடன் முடிவடைகின்றது என்றும் குறித்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணம்,குருநகரில் உள்ள கடையொன்றில் உற்பத்தித் திகதி, கலாவதித் திகதி வேறுபட்டுக் காணப்பட்ட சீரக இனிப்புப் பைக்கற்றுகள் 14 பாவனையாளர் அதிகாரசபையால் நேற்றுமுன்தினம் கைப்பற்றப்பட்டன. அதையடுத்து பாவனையாளர் அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 20 போத்தல்கள் கொண்ட பைக்கற்றுக்காக அவை பொதியிடப்பட்டன. பைக்கற்றின் வெளிப்புறத்தில் உள்ள உற்பத்தித் திகதி, கலாவதித் திகதியும் உள்ளிருக்கும் போத்தல்களில் உள்ள உற்பத்தித் திகதி, கலாவதித் திகதியும் வேறுபட்டுள்ளன. போத்தல்களில் மிகச் சிறிய எழுத்துக்களில் திகதிகள் குறிப்பிடப்பட்டன.

போத்தல்களின் பொதியில் 10 மாதங்களுக்கு அதிகமான காலம் கொண்ட காலாவதித் திகதி குறிப்பிடப்பட்டது. வர்த்தகர்கள் பொருள்களைக் கொள்வனவு செய்யும்போது வெளிப்புறத்தில் உள்ள காலாவதித் திகதியைப் பார்த்தே கொள்வனவு செய்வார்கள். இவ்வாறான பொருள்களை கொள்வனவு செய்யும்போது கலாவதித் திகதியை வர்த்தகர்கள் சரியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். விற்பனை முகவர்களும் அதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். சிறுவர்கள் உபயோகிக்கும் இனிப்புப் பண்டங்கள் மோசடியான முறையில், விற்பனைக்கு வழங்கப்பட்டிருத்தல், விநியோகித்தல், வழங்கல் போன்றவற்றுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்படும் – என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

fire-2 copy

Related posts: