இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைப்பு வழங்க தொழிற்சங்கங்கள் மறுப்பு!

Saturday, September 10th, 2016

அதிகாரிகள் தமது பதவிக்காக தொழிற்சங்கத்தின் அனுமதி இன்றி இணைந்த சேவைக்கு கையொப்பமிட்டால் பதவிகளில் இருக்க முடியாது – வட மாகாண இலங்கை போக்குவரத்துச் சபையின் இணைந்த தொழிற்சங்கம் எச்ரிக்கை விடுத்துள்ளது.

தற்போது கொண்டுவரப்பட்ட நேர அட்டவணை பக்கச்சார்பானதாக உள்ளதால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாதெனவும் வட மாகாண இலங்கை போக்குவரத்துச் சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள் –

கடந்த காலத்தில் தொழிலாளர்களின் வேதனத்தைகூட சீராக பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. எனினும் கடந்தகால வரலாற்றை தோற்கடித்து தற்போது நல்ல நிலையில் இயங்கி வருகின்றோம். ஆனால் தற்போது வட மாகாண சபையினால் ஒரு பாதையில் தனியார் பேருந்துக்கு 60 வீத சேவையும் இலங்கை போக்குவரத்து சபைக்கு 40 வீத சேவையும் வழங்கியிருப்பதுடன் இன்று இலங்கை போக்குவரத்துசபை சிறந்த சேவையை வழங்கிவரும் வவுனியா – யாழ்ப்பாணம், வவுனியா – மன்னார், மன்னார் – யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு போன்ற சில பாதைகளுக்கு மட்டுமே பாதை அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அட்டவணையினால் எமது சாலைக்கு வருமான வீழ்ச்சி ஏற்படும்போது 2500 மேற்பட்ட எமது குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகின்றது. அத்துடன் பருவகால சீட்டு பெற்று உரிய நேரத்துக்கு செல்லவேண்டிய மாணவர்கள், உத்தியோகத்தர்களின் பயணங்களிலும் தாமதம் ஏற்படும்.

அத்துடன் எம்மால் பணியாற்றி வந்த முக்கிய நேரங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் பேருந்துகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களுக்கு நேர அட்டவணை தயாரிக்கப்படவில்லை. எனவே, ஏனைய இடங்களைப்போல் 50 இற்கு 50 இற்கு என்ற வீதத்தில் சேவையில் ஈடுபடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டால் மாத்திரமே நாம் இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைப்போம்.

அத்துடன் பிராந்திய முகாமையாளர், பிராந்திய செயலாற்று முகாமையாளர், சாலை முகாமையாளர்களுக்கு நாம் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புவதாவது, உங்கள் பதவிக்காகவோ வேறு பதவிக்காகவோ தொழிற்சங்கத்தின் அனுமதி இன்றி இணைந்த சேவைக்கு கையொப்பமிட்டால் பதவிகளில் இருக்க முடியாது என்பதுடன் வட மாகாணத்தில் எந்த சாலையிலும் நீங்கள் பணியாற்ற நாம் அனுமதிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

Related posts: