இடமாற்றம் தொடர்பில் குழப்பமடைய  வேண்டாம்!

Wednesday, December 14th, 2016

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சிற்கு உட்பட்ட மாகாணக் கல்வித் திணைக்களத்தாலும், வலயக் கல்வித் திணைக்களத்தாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஆசிரிய இடமாற்றங்களில் தமது சங்கம் முழுமையாக பங்கேற்கின்றது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது

நடைபெறுகின்ற இடமாற்ற சபைக் கூட்டங்களில் சங்கத்தின் பிரதி நிதிகள் முழுமையாக கலந்து கொள்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க 2017 ஆம் ஆண்டுக்கான ஆசிரிய இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை.

இதனை சங்கத்தின் பொதுச் செயலாளர் புவனேஸ்வரனிடம் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும், வடமாகாணக் கல்விப் பணிப்பாளரும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வன்னிப்பிரதேச பாடசாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான இடமாற்ற சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அவர்களுக்கான விடுவிப்புக் கடிதங்கள் உரிய வலயங்களுக்கு அனுப்பப்பட்டு பாடசாலைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவர்கள் 2017ஆம் ஆண்டு பாடசாலை முதலாம் தவணைக்காக தொடங்கும்போது புதிய பாடசாலைகளில் கடமைப் பொறுப்புக்களை ஏற்க முடியும் என சங்கத்தின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

இதைவிட வலயங்களில் நடைபெறும் உள்ளக இடமாற்றங்களில் குழப்ப நிலை தோன்றாதிருக்க ஆசிரிய சமப்படுத்தலைச் சீராக மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் நடைபெறும் சகல ஆசிரிய இடமாற்றங்களையும் இடமாற்ற சபைக்கு ஊடாக செய்யவேண்டும் என்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை முறையற்ற இடமாற்றங்களை தமக்கு முறையிடுமாறு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ctta

Related posts: