ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் மரணம்!

Saturday, February 24th, 2018

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர்கள் இருவர் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்ததுடன் நோயின் தாக்கத்தை தாங்கமுடியாது இளைப்பாறிய ஆசிரியர் ஒருவர் தனது உயிரை மாய்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

திருநெல்வேலி கிழக்கு பகுதியைச் சேர்ந்த வியாபாரியும் 9 பிள்ளைகளின் தந்தையுமான கந்தையா சீவரட்ணம்(வயது 59) என்பவர் நேற்று முன்தினம் இரவு சுவாசிப்பதற்கு முடியாமல் சிரமப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை தொடர்ச்சியாக இருமிய வண்ணம் சுவாசிக்க முடியாமல் இருந்த காரணத்தினால் உறவினர்கள் அவரை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் நடராசா (வயது 85) என்பவர் நேற்று காலை சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். நேற்று காலை உடனடியாக    யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த 4 பிள்ளையின் தந்தையும் இளைப்பாறிய ஆசிரியருமான ராமன் சின்னத்தம்பி வயது 78 என்பவர் ஆஸ்துமா மற்றும் இருதய வியாதியால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.

நேற்று காலை நோய் காரணமாக தன்னால் உயிர் வாழ முடியாது என கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்வளை என்ற இடத்தில் உள்ள வயல்கிணற்றில் விழுந்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

மேற் குறித்த மூவரும் ஆஸ்துமா மற்றும் இருதய வியாதியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள் என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

Related posts: