அவன்காட் தலைவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

Thursday, October 20th, 2016

அவன்காட் மெரிடைம் நிறுவனத்தின் தலைவரான, ஓய்வு பெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியின் வெளிநாடு செல்வதற்கான கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வைத்திய சிகிச்சை தொடர்பில், சிங்கப்பூர் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்து ஒரு வருட காலம் வெளிநாடு செல்வதற்கு அவர் நீதிமன்ற அனுமதியை கோரியிருந்தார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான சுமார் பல கோடி ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டை முன்வைத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு, குறித்த வழக்கில் பிணையில் விடுதலையாகியுள்ள அவருக்கு நீதிமன்றத்தினால் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்தான மனு விசாரணை இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் கிஹான்பிலபிட்டிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான், அவ்வனுமதியை வழங்கியிருந்தார்.

ஒரு வருடம் எனும் நீண்ட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தமது எதிர்ப்பை நீதிமன்றில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், அவரது வேண்டுகோளுக்கு அனுமதியளித்த நீதிமன்றம், ரூபா 50 இலட்சம் ரொக்கம், மற்றும் மூன்று சரீரப் பிணைகள் ஆகியவற்றில் அவரது கடவுச்சீட்டை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதன்போது, அவரது பிணையாளர்களாக அவரது மனைவி, அவரது சகோதரர் மற்றும் அவரது மனைவியின் சகோதரர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

nissanka-senadhipathi

Related posts: