அப்பிள் கணக்குக்குள் நுழையக்கூடாது – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!
Saturday, August 5th, 2017ஆணைக்குழுவிடம் கையளித்துள்ள அலைபேசியின் தரவுகளை மாற்றவோ அல்லது அழித்துவிடவோ கூடாதென, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸுக்கு, திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கட்டளையிட்டுள்ளது.
ஆணைக்குழுவின் அமர்வு, நேற்று (03) கூடியபோது, முறைப்பாட்டார் சார்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட ஆஜராகியிருந்தார்.
அவரால், விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே, ஆணைக்குழு மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளது.
தன்னுடைய அப்பிள் கணக்குக்குள் உள்ள தரவுகளை அழிப்பதற்கு அல்லது அதற்குள் நுழைவதற்கு முயல்கின்றமை தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும் என்றும் ஆணைக்குழு, இதன்போது சுட்டிக்காட்டியது.
அலோசியஸ், தன்னுடைய அப்பிள் கணக்குக்குள், தன்னுடைய மனைவியின் அலைபேசியின் ஊடாக நுழைவதற்கு, முயற்சிகளை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் கவனத்துக்கு இதற்கு முன்னர் கொண்டுவரப்பட்டதை அடுத்தே, ஆணைக்குழு மேற்கண்டவாறு கட்டளையிட்டது.
இதேவேளை, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேனவின் அலைபேசி மற்றும் மடிகணினி ஆகியனவற்றை, ஆணைக்குழுவின் செயலாளரிடம் ஒப்படைக்குமாறும் ஆணைக்குழு, நேற்று (03) கட்டளையிட்டது.
விசாரணைகளுக்காக ஆணைக்குழுவிடம், வழங்கிய தன்னுடைய அலைபேசியின் தரவுத் தளத்துக்குள் பிரவேசிப்பதற்கு, அர்ஜுன் அலோசியஸ், தனது மனைவியின் அலைபேசியைப் பயன்படுத்தி, முயன்றுள்ளார் என, சட்டமா அதிபர் திணைக்களம், கடந்த 1ஆம் திகதியன்று அறிவித்தது.
இது தொடர்பில் ஆராய்ந்து, புதன்கிழமையன்று (02) கட்டளையிடுவதாக, ஆணைக்குழு அறிவித்திருந்தது. எனினும், நேற்றுமுன்தினம் (03) மேற்கண்ட கட்டளையை ஆணைக்குழு, பிறப்பித்துள்ளது.
அர்ஜுன் அலோசியஸ், பொய்யான தகவல்களைக் கூறினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணைக்குழு இதன்போது குறிப்பிட்டது.
விசாரணைக்கான சாட்சியங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதென, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
Related posts:
|
|