அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வைரவிழா மலர் வெளியீடு

Sunday, May 29th, 2016

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வைரவிழா மலர் வெளியீட்டு நிகழ் நேற்று (28-05-2016)  காலை சிறப்பாக இடம்பெற்றது. காலை  நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை இந்து மாமன்ற யாழ். பிராந்திய பணிமனையிலிருந்து நந்திக் கொடி ஏந்தி ,மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் ஆரம்பமாகி நல்லூர் கந்தசுவாமி ஆலயம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கே தரிசனம் முடித்த பின் நல்லை ஆதீனகலா மண்டபத்தை ஊர்வலம் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் காலை -9.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமானது.

மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விழாவில் வடமாகாண முதலமைச்சர்  நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன், இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

செஞ்சொற் செல்வர் கலாநிதி – ஆறு .திருமுருகன் விழா நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார். நல்லை ஆதீன முதல்வர்  ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அமெரிக்காவின் ஹவாய் ஆதீன நிறுவனர் ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் சீடர் ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதசுவாமிகள், இந்தியாவின் பேரூர் ஆதீனத்தைச் சேர்ந்த இளைய பட்டம்  மருதாசல அடிகளார்  ஆகியோர் ஆசியுரைகளை ஆற்றினர்.

வைரவிழா மலர் அறிமுகவுரையை மாமன்ற உபதலைவரும், மாமன்ற இந்து ஆராய்ச்சி நிலைய இயக்குனருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி – ஆறு .திருமுருகன் வைர விழா சிறப்பிதழான ‘இந்து ஒளி’  மலரின் அறிமுகவுரையை நிகழ்த்தியதைத் தொடர்ந்து வைர விழா மலரை இந்தியாவின் பேருர் ஆதீனத்தைச் சேர்ந்த இளையபட்டம் மருதாசல அடிகளார் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கலும் நடைபெற்றது.

Related posts: