2022 பாதீட்டினூடாக எமது பகுதிகளில் பல்வகை வாழ்வாதார வசதிகளும், தொழில் வாய்ப்புகளும் பெருகுவதற்கான சந்தர்ப்பம்; உருவாக்கப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினூடாக திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திகளின் மூலம் எமது பகுதிகளில் பல்வகை வாழ்வாதார வசதிகளும், தொழில் வாய்ப்புகளும் பெருகுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான எனது கருத்துக்களை நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை தொடர்பில் பார்க்கின்றபோது, மன்னார், முசலி, கிளிநொச்சி, பூநகரி போன்ற பகுதிகளில் கலப்பு, புதுப்பிக்கத்த மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துறைமுகங்களைப் பொறுத்தவரையில், காங்கேசன்துறை இறங்குதுறை பணிகளுக்கென 797 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துறைமுகம் அபிவிருத்தியடையும் நிலையில் இந்தியாவில் இருந்து நேரடியாகவே எமது பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்களாக ஏனைய தேவைகளுக்கேற்ற பொருட்களையும் கொண்டு வருவதன் மூலம், குறைந்த விலையில், இலகுவாக அவற்றை கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு எமது மக்களுக்கு ஏற்படும்.
இத்தகைய அபிவிருத்திகளின் மூலம் எமது பகுதிகளில் பல்வகை வாழ்வாதார வசதிகளும், தொழில் வாய்ப்புகளும் பெருகுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
இதேநேரம் ஊடக அமைச்சின் கீழ் 100 மில்லியன் ரூபா மட்டக்களப்பு புதிய தபாலகக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலே சுன்னாகம் தபாலகம் மற்றும் தபால் அதிபர் தங்குமிட கட்டிட நிர்மாணத்திற்கென 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி 26.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், அதன் பணிகள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் ஊடக அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டுமெனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|