19 இன் பலவீனங்களே சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட இன்றைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களைத் தூண்டியது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, October 22nd, 2020

19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த நாட்டையும் முன்னெடுத்துச் செல்ல முடியாமல், உரிய கால வரையறைக்கு முன்பாகவே அந்த அரசைக் கலைக்க நேரிட்டதானது, பெரும்பான்மை பலத்தை இந்த அரசுக்குத் தேடித் தருவதற்கு வாய்ப்பாக அமைந்தது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்’து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

20 ஆவது திருத்தச் சட்டமானது திடீரென வானத்திலிருந்து குதித்தது அல்ல. தற்போதைய ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி பதவியில் அமர்வதற்கு முன்பாகவே 19 வது திருத்தம் தொடர்பில் பேசப்பட்டு வந்தது. இது குறித்து அனைவரும் அறிந்திருந்தனர். ஜனாதிபதி அவர்கள் அப்பதவிக்கு வந்ததன் பின்னர், 19வது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் காரணமாக இந்த நாடு முகங்கொடுத்திருந்த இடையூறுகள், தடைகள், பொறுப்புக் கூறலுக்கான நம்பகத்தன்மை இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் பொதுத் தேர்தலுக்கு முன்பாக 19வது திருத்தச் சட்டத்தை திருத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலின்போது, ஜனாதிபதி அவர்கள் பெற்றிருந்த மக்கள் ஆணையை அந்த மக்களுக்கு நன்மை பயக்கின்ற வகையில், வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டுமெனில், 19வது திருத்தச் சட்டத்தை மாற்ற வேண்டும். அதனை மாற்றுவதெனில் நாடாளுமன்றத்தில் 3ஃ2 பெரும்பான்மை வேண்டும் என உணரப்பட்டு, பொதுத் தேர்தலின் போது அதற்கான ஆணை மக்களிடம் கோரப்பட்டது.

19வது திருத்தச் சட்டத்தின் மூலமாக மக்கள் அனுபவித்திருந்த துன்ப துயரங்களும், வாழ்வாதாரங்களுக்கான முட்டுக்கட்டைகளும், பாதுகாப்பற்ற சூழலும் என பல்வேறு காரணங்கள் புதியதொரு, வலிமை மிக்க, சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களைத் தூண்டியதைப் போன்றே, 19வது திருத்தச்; சட்டத்தை மாற்றியமைப்பதற்கான நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதி அவர்களதும், பிரதமர் அவர்களதும் வேண்டுகோள்களுக்கு அமைவாக நாடாளுமன்றத்தில் வழங்குவதற்கும் மக்களைத் தூண்டியது.

அந்த மக்களது ஆணையின் பிரகாரமே இந்த 20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts: