வரிகள் மக்களின் உழைப்பை சுரண்டுவதாக அமைந்துவிடக்கூடாது – டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Thursday, September 5th, 2019


ஏற்றுமதி அபிவிருத்தித் துறையின் முன்னேற்றம் கருதி 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் 2000 ஏற்றுமதியாளர்களை நிலைப்படுத்தப் போவதாகவும், அதற்கான அறிவுறுத்துகின்ற செயலமர்வுகள் மாகாண ரீதியிலாக மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டு, கடந்த வருடம் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்ப செயலமர்வு மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்றிருந்ததாகவும் கூறப்பட்டது.

மேற்படி நோக்கமானது முறையாகக் கையாளப் பட்டிருந்தால், தற்போதைக்கு 1500க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் நிலை பெற்றிருப்பார்கள் என நம்புகின்றேன்.

ஆனால், சொல்வதொன்று, செய்வதொன்று, நடப்பதொன்று என்ற இந்த ஆட்சியாளர்களின் கோட்பாட்டுக்கமைவாக இதுவரையில் எத்தனை ஏற்றுமதியாளர்கள் நிலைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்? என்பது தெரியவில்லை.

என்னதான் ஏற்றுமதியாளர்களை அதிகரிப்பது, நிலைப்படுத்துவது எனக் கூறிக் கொண்டாலும், எமது ஏற்றுமதி அபிவிருத்தித் துறையானது பல்வித தன்மையினைக் கொண்டிருத்தல் அவசியமாகின்றது.

குறிப்பாக, ஆரம்ப காலங்களிலே இந்த நாட்டு ஏற்றுமதிப் பொருட்கள் என்ன என்றால், தேயிலை,  இறப்பர், தெங்கு என்ற நிலை மாறி இப்போது தேயிலை, ஆடை, உல்லாசப் பிரயாணத்துறை என்று ஆகிவிட்டுள்ளது.  இவ்வாறான மாறுதல் இடம்பெற்றிருந்தாலும்கூட, இவற்றுக்குப் பதிலாக ஏனைய நாடுகளைப் போல் பரந்தளவிற்கு வேறு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? என்பதற்கு பதில் இல்லை.

தொழில்நுட்பக் கருவிகள், உபகரணங்கள் என்ற வகையில் ஏதுமில்லை. அதிகளவு மண் இந்த நாட்டில் இருந்தும்கூட மட்பாண்டங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறோமா? அதுவுமில்லை. இவை எல்லாம் சிறு கைத்தொழில்களுக்குள் அடக்கப்பட்டு விட்டுள்ளன.

ஏற்றுமதி குறைவடைதல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் மலட்டுத் தன்மை, நவீனத்துவம் வரையறையுறுதல் போன்ற காலங்காலமாக நிலவிவருகின்ற பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகளைத் தேடிக் கொள்ள வேண்டுமாயின் முதலில் குடிவரவு தொடர்பிலான சட்டத்தைத் திருத்தங்களுக்கு உட்படுத்தி, மிகவும் முற்போக்கான சட்டத்தின் ஊடாக சுதந்திரமான நடமாட்டத்திற்கு வழியேற்படுத்தப்படல் வேண்டும் என அண்மையிலே இலங்கையின் பொருளாதாரத்துறை சார்ந்த முன்னேற்றம் தொடர்பிலே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

தொழில்நுட்ப அறிவு தொடர்பிலான தொடர்புகள் அதிகளவில் இருத்தலும், இல்லாததும் என்ற காரணத்தைக் கொண்டு உலகில் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மாறுதல்கள் நிலவுகின்றன. 

கைத்தொழில் நாடுகளின் விவசாயிகளைவிட அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளின் சம்பிரதாய விவசாயிகள் அறிவில் மிகைத்தவர்கள். என்றாலும், அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளின் விவசாயிகள் நவீன கருவிகள், அதிக விளைச்சலைத் தருகின்ற விதைகள், மிகுந்த உயர் தர உரம் மற்றும் சந்தை வாய்ப்புகளின் தொடர்புகள் போன்ற காரணங்களால் உயர் வருமானத்தைப் பெறுவதாகவும் அந்தக் கருத்தரங்கிலே கருத்துகள் முன்வைக்கப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய கருத்தரங்குகளை நடத்தி, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு கருத்துகளைப் பெறுகின்ற இந்த நாட்டில், அந்தக் கருத்துக்களை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு முயலாத ஒரு தன்மையையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

உற்பத்திகளின் பல்விதத் தன்மை தொடர்பிலும் இதே கருத்தமர்வில் பிரஸ்தாபிக்கப்பட்டும் இருந்தது. அதாவது, ‘பொருளாதார விருத்தி என்பது அதன் உற்பத்தித் தொகுதிக்குள் புதிய பொருட்களும், சேவைகளும் உட்புகுதல் ஆகுமே அன்றி, ஒரு வர்க்க பொருட்களின் உற்பத்திகளை மேலும், மேலும் அதிகரிப்பதால் அல்ல’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய கருத்துகளின் அடிப்படையில் இந்த நாட்டு ஏற்றுமதி அபிவிருத்தி குறித்து யோசிக்க வேண்டிய காலமானது மேலும், மேலும் தாமதப்படுமேயானால், இறுதியில் எஞ்சப் போவது எதுவுமே இருக்காது என்றே தோன்றுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்; டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை ஃ நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை ஃ துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைஉற்பத்தி வரி விசேட எற்பாடு சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கெலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts: