வங்கியில் மூலதன சிக்கல்கள் இருப்பின் அதனைத் தீர்த்துவைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, August 22nd, 2019

வங்கியின் மூலதன சிக்கல்கள் இருப்பின் அதனைத் தீர்த்து வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகவே இருத்தல் வேண்டும். அந்த வகையில் கடந்த வருடம் இலங்கை வங்கிக்கு அரசாங்கம் 5 பில்லியன் நிதியை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனவே, அத்தகையதொரு ஏற்பாட்டினை மக்கள் வங்கி தொடர்பிலும் மேற்கொள்ள இயலும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கி சட்டமூலத் திருத்தம் தொடர்பில் நடைபெறுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்;பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அத்தகையதொரு நிலை இருந்தும், தொகைக் கடன்களை விநியோகிப்பது, பங்குகளை விநியோகிப்பது போன்ற ஏற்பாடுகளை மக்கள் வங்கி தொடர்பில் மாத்திரம் மேற்கொள்ளத் துடிப்பதே இங்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

மேலும், இந்தத் திருத்தச் சட்டத்தின் 20 (1)ஆம் சரத்தின் பிரகாரம் மத்திய வங்கிக்கு இருந்த தலையீட்டு உரிமம் இல்லாது செய்யப்பட்டும், 21 (1) (ஆ), 21 (3) (1) (ஆ) மற்றும் 43 (2) (இ) போன்ற சரத்துகள் நீக்கப்பட்டும் உள்ளன. அந்தவகையில், மத்திய வங்கிக்கு உரிய தலையீட்டு அதிகாரங்களை நீக்குவதற்கு முயல்வது ஏன்? என்பது பலத்த சந்தேகத்திற்குரிய விடயமாகவே இருக்கின்றது.

1961 – 29ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் 12 (1) சரத்தினைப் பார்க்கின்றபோது, ‘வங்கியின் பங்கு மூலதனமானது, ஒரு பங்கு ஐம்பது ரூபா வீதமான ஒரு இலட்சத்து இருபதாயிரம் பங்குகளாகப் பிரிக்கப்பட்ட அறுபது இலட்சம் ரூபாவாக இருத்தல் வேண்டும். எனினும், அதற்கென பிரதிநிதித்துவ மந்திரி சபையின் மூலமாக நிறைவேற்றப்பட்ட  ஆலோசனைக்கமைவாக பங்கு நிதியானது காலத்திற்குக் காலம் அதிகரிக்கப்பட இயலும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சரத்து மேற்படி திருத்தச் சட்டத்தில், ‘வங்கியின் அதிகாரமளிக்கப்பட்ட மூலதனம், ஒவ்வொன்றும் ஐம்பது ரூபா கொண்ட ஒரு பில்லியன் பங்குகளாகப் பிரிக்கப்பட்ட ஐம்பது பில்லியன் ரூபா ஆதல் வேண்டும்’ எனத் திருத்தப்பட்டுள்ளது.

இவற்றைப் பார்க்கின்றபோது, இவ்வாறு, மக்கள் வங்கியின் பணியாளர்களுக்கும், கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்வோருக்கும் பங்குகளை விநியோகிப்பது என்ற பெயரில், மக்கள் வங்கிப் பணியாளர்களது எதிர்ப்பினை சமாளித்துக் கொண்டு, மக்கள் வங்கியை விற்பதற்கான ஓர் ஏற்பாடே இதுவென, மேற்படி திருத்தச் சட்டம் உணர்த்துவதாகவே மக்களிடையே ஒரு சந்தேகம் நிலவி வருகின்றது.

நாட்டில் பாரிய நட்டங்களுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்ற பல அரச நிறுவனங்களுக்குத் திறைசேரி இன்னமும் நிதியினை வழங்கி வருகின்ற நிலையில், இலாபம் ஈட்டுகின்ற ஒரு அரச வங்கியின் மூலதன விருத்திக்கென இத்தகைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு முயல்வதே மக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமாகவும் இருக்கின்றது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இத்தகைய நிலையில், சில நியாயமான கேள்விகளை இலங்கை, வங்கி ஊழியர் சங்கத்தினர் எழுப்புகின்றனர்.

அந்த வகையில், உத்தேச மக்கள் வங்கித் திருத்தச் சட்டத்தின் உண்மையான தேவை என்ன? என்பது பற்றிய கேள்வி எழுகின்றது.இந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக மக்கள் வங்கியின் அரச உரிமத்திற்கு எவ்விதமான பாதிப்புகளும் – அழுத்தங்களும் ஏற்படாது என்பதை உரிய வகையில் அரசாங்கம் உறுதிபடுத்த வேண்டும்.

மேற்படி சட்டத் திருத்தம் ஊடாக விநியோகம் செய்வதற்கு எதிர்பார்ப்பு கொண்டுள்ள தொகைக் கடன்கள், ஒப்படைக்கத்தக்க தொகைக் கடன்கள் ஆகுமெனில் அவை ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் பங்குகளாக மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டா? என்பது குறித்து முன்கூட்டிய தெளிவுகளை அரசு தர வேண்டும்.

ஏதேனும் ஒரு வகையில் அவ்வாறு பங்குகளாக மாற்றம் பெறுகின்ற நிலையில், மக்கள் வங்கியின் அரச உரிமத்திற்குப் பாதிப்புகள் ஏற்படுமா? என்பது தொடர்பிலும், அரசு மக்கள் வங்கி தொடர்பிலான பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றதா? என்பது தொடர்பிலும் தெளிவுகள் தேவை.

2018 வரவு – செலவுத் திட்டத்தின் மூலமாக குறிப்பிடப்பட்டிருந்ததன் பிரகாரம், அரச வங்கிகளின் அரச பங்குகளைத் தனியாருக்கு விற்கின்ற திட்டமானது, மக்கள் வங்கியிலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றதா? என்கின்ற வங்கி ஊழியர்களது கேள்விக்கு அரசு பதில் வழங்க வேண்டும்.

Related posts:

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கியதாகவே எமது பயணங்கள் தொடரும் - வவுனிய...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு மகஜன எக்சத் பெரமுன முழுமையான பங்களிப்பை வழங்கும் என நம்புகி...
தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் நலனகளில் கூடிய அக்கறை செலுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!