முறைகேடுகளுக்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்தது கிடையாது – முன்பள்ளி ஆசிரியர் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, September 26th, 2019


மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும்போதும் சரி தொழில் வாய்ப்புக்களிலும் சரி எந்த விடயங்களை முன்னெடுக்கும் போது நாம் ஒருபோதும் முறைகேடுகள் நடைபெறுவதற்கு இடம் கொடுத்தது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற நிரந்தர நியமனத்தில் பாதிக்கப்பட்ட சண்டிலிப்பாய் முன்பள்ளி ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஒரு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும்போது அத்தொழிலில் ஏற்கனவே இருக்கும் தொழிலாளர்களது நலன்கள் முன்னிறுத்தப்பட்ட பின்னரே அடுத்த கட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். அந்த பொறிமுறையூடாகவே நாம் கடந்த காலத்தில் தொழில் வாய்ப்புக்களை எமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக் கொடுத்திருந்தோம்.

அந்தவகையில் முன்பள்ளி ஆசிரியர்கள் என்பது சாதாரண ஒரு தொழில் நிலை அல்ல. அது எமது சமூகத்தின் அடுத்த சந்ததியினரை தூக்கி நிறுத்துவதற்கான அடித்தளத்தை இடும் ஆணிவேராகவே அமைந்துள்ளது. இதனை கருத்திற் கொண்டுதான் கடந்த காலங்களில் நாம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நலன்களை முன்னிறுத்திய பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தோம்.  ஆனாலும் அது முழுமை பெறவில்லை.

இன்று எமது சிறார்களை வழிநடத்திச் செல்லும் முன்பள்ளி அசிரியர்கள் பல துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.  ஆனாலும் அதற்கான அரசியல் அதிகாரம் எம்மிடத் தற்போது இல்லாதுள்ளது. ஆட்சியாளர்களுடன் பின்னிப் பிணைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது சுயநலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படுகின்றனரே தவிர எச்சந்தர்ப்பத்திலும் எமது மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு செயற்பட்டது கிடையாது. இதனால் தான் இவ்வாறான தவறுகள் நடக்க காரணமாகின்றது.

நாம் ஆட்சியில் தொடர்ந்தும் இருந்திருந்தால் இவ்வாறான சிறிய பிரச்சினைகளுக்கெல்லாம் சில நாட்களிலேயே நிரந்தர தீர்வுகளை பெற்றுக் கொடுத்திருந்திருப்போம். அவ்வாறு அன்று நாம் பல தீர்வுகளை கண்டுகொடுத்து சாதித்தும் காட்டியிருக்கின்றோம்.

தற்போது அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்று கிடைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் எமது மக்களுக்கு மறுபடியும் கிடைத்துள்ளது. இதை தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்தி எம்மை நம்பி எமது வழிமுறைநோக்கி அணிதிரள்வார்களேயானால் நிச்சயம் அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து அவர்களது அபிலாஷைகளுக்கு நான் தீர்வு கண்டுகொடுப்பேன் என்றார்.

Related posts: