மதுவரிக் கட்டளைச் சட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 18th, 2019

கடந்த ஆண்டில் மதுவரித் திணைக்களம் மேற்கொண்ட சுற்றி வளைப்புகளின்போது சுமார் 203.46 மில்லியன் ரூபா அத் திணைக்களத்திற்கு வருமானமாகக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேநேரம், இலங்கையில் மது பானங்களைத் தயாரிக்கின்ற சில நிறுவனங்கள் தமது உற்பத்திகள் தொடர்பில் சரியான – உண்மையான புள்ளி விபரங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால் அரசாங்கம் வருடாந்தம் 10 முதல் 12 பில்லியன் ரூபா வரையில் மது வரி வருமானத்தை இழந்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

இதைவிட சட்ட ரீதியற்ற மதுபான உற்பத்திகளில் ஈடுபடுவோர் காரணமாகவும் பாரிய வருமான இழப்பிற்கு அரசு உட்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மதுவரிக் கட்டளைச் சட்டமானது சுமார் 106 வருடங்கள் பழைமைவாய்ந்தது என்பதால், அதனை மறுசீரமைத்து, புதிய வழிமுறைகள் மற்றும் வினைத்திறன் மிக்கதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

மேலும், அண்மைக் காலமாக மது வரித் திணைக்களத்தில் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுவந்ததை அறியக் கூடியதாக இருந்தது. துணை மது வரி ஆணையாளர்களை பிரதி மது வரி ஆணையாளர்களாக பதவி உயர்த்துவதில் இழுபறி நிலைமை காணப்படுவதாகவும், இதனால் மேற்படித் திணைக்களத்தின் பணிகள் முடங்கிய நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன் தற்போதைய நிலை என்னவென அறியத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகள் – மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான மூன்று அறிவித்தல்கள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts: