மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, October 18th, 2019

மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும். ஆனால் பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் அவ்வாறு காணப்படவில்லை. மக்களது நலன்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடுகளும்  ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்று என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி வரவேற்கத்தக்கதொன்றுதான். ஆனாலும் பலாலி பிரதேசமும் அதன் பெருமையும் அடையாளங்களும் இல்லாது போய்விடக கூடாது என்பதுதான் எமது கோரிக்கையாக உள்ளது.

நாட்டில் நடைபெற்ற யுத்தத்தால் இராணுவத்தினருக்கென்று மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டன. அதன்பின்னர் அபிவிருத்திக்கென அபகரிக்கப்பட்டது. இன்று பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் விமானநிலையமாக இன்று உருமாறியுள்ளது. இதனால் பலாலி என்ற தமிழ் மக்களின் பெருமை பொருந்திய பிரதேசம் அதன் அடையாளங்களை இழந்துவருகின்றது. நாளடைவில் பலாலி என்றொரு பிரதேசம் இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லாது போய்விடக் கூடாது என்பதே எமது மக்களின் பெருவிருப்பாக உள்ளது.

எமது மக்களின் விருப்பங்களுக்கே நாம் செவிசாத்து வருகின்றோம். இப்பிரதேச மக்கள் தமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமக்கான நஷ்ட ஈடுகள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் பலவாறு என்னிடம் தமது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் வந்து தெரிவித்துவருகின்றனர்.

மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு காணப்படவில்லை. மக்களது நலன்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் நாம் துணைபோகமாட்டோம்.

கடந்த கால ஆட்சி அதிகாரங்களில் நாம் அரசாங்கத்தில் இருந்தபோது அதிகளவான பணிகளையும் நலத்திட்டங்களையும் நாம் மக்களுக்காக செய்துகாட்டியிருக்கின்றோம். அந்தவகையில்தான் நான் கூறுகின்றேன் என்னை நம்புங்கள். நாம் செய்வோம் செய்விப்போம் என்று என அவர் மேலும் தெரிவித்தார்.


ஆனையிறவில் உப்பளப் பட்டினத்தை உருவாக்குவதே எனது நோக்கம் - டக்ளஸ் தேவானந்தா
யாழ்.வசந்தபுரம் பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!
மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் கட்சியின் சார்பில் தெரிவான உள்ளூராட்சி  மன்ற உறுப...
அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – டக்ளஸ்...