நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் – வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்.பி.!

Tuesday, September 3rd, 2019

இலங்கை நீதிமன்றங்களிலே சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.  நீதிமன்றங்களின் மூலமாக மக்கள் நியாயத்தையே எதிர்பார்க்கின்றனர். இத்தகைய நியாயத்தை வழங்குவதற்கான வழிகளில் வழக்குத் தீர்ப்புகளை வழங்குவதில் ஏற்படக்கூடிய தாமதங்களைக் கூடியவரையில் குறைத்துக் கொள்வதானது மிக முக்கியமான விடயமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 1978ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாட்டைப் பொறுத்த வரையில், உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் என்கின்ற நீதி மன்றக் கட்டமைப்புகளில் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் தொகையே 7 இலட்சத்தையும் தாண்டியதாக இருக்கின்றன.

மேலும், இந்த நீதிமன்றக் கட்டமைப்புகளில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்குகளும் ஏராளமாகும். இவற்றின் தீர்ப்புகள் வழங்கப்பட மேலும் காலதாமதங்கள் ஆகலாம். காலதாமதமாகின்ற நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்றும் கூறப்படுவதுண்டு.

இத்தகைய காலதாமதங்கள் மக்களை நீதிமன்றக் கட்டமைப்புத் தொடர்பில் விரக்தி நிலைக்குத் தள்ளிவிடுகின்ற செயற்பாடுகளையே மேற்கொள்கின்றன. அம் மக்களை பல்வேறு இழப்புகளுக்கு முகங்கொடுக்கச் செய்கின்றன.

குற்றம் தொடர்பிலான ஒரு வழக்கு காலதாமதங்களுக்கு உட்படுமாயின் அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குத் தொழில் செய்ய இயலாத, சமூக வாழ்க்கையில் முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. வழக்;குத் தீர்ப்பு வெளிவந்து அவர் குற்றமற்றவர் என நிரூபனமானாலும், அவரது அதுகால வரையிலான இழப்புகளுக்குப் பொறுப்புக் கூறுவது யார்? என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது.

வழக்குகளின் தீர்ப்புகள் தாமதாகின்றபோது சிலவேளை முறைப்பாட்டாளர்கள் இறந்துவிட நேரிடலாம். சாட்சியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல, அல்லது நீண்ட தாமதங்கள் காரணமாகச் சாட்சிகள் மறக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். இத்தகைய நிலைமைகளில் உரிய வழக்குகள் தொடர்பில் இத்தகைய காரணிகள் மாபெரும் அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம்.

1978 இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 126 (5)ஆம் சரத்தில், அடிப்படை உரிமை தொடர்பான மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக உயர் நீதிமன்றத்தினால் அதனை விசாரணை செய்து, முடிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இலங்கையில் வழக்கொன்று விசாரணை செய்யப்பட்டு, முடிக்கப்பட வேண்டிய காலவரையறையைக் குறிப்பிட்டுள்ள ஒரெயொரு எழுத்து மூல சட்ட மானியம் இது மாத்திரமே எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தச் சட்ட மானியமானது அடிப்படை உரிமைகள் தொடர்பிலான வழக்குகளுக்கு மாத்திரமேயாகும்.

என்றாலும், இந்தச் சட்டம்கூட ஒழுங்கு முறையில் பின்பற்றப்படுகின்றதா? என்பதும் கேள்விக் குறியாக இருப்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்;.

எனவே, வழக்குகள் காலதாமதமாகின்ற விகிதாசாரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் அவசியமாகின்றன என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன்.

அந்த வகையில், நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கு உணர்த்துகின்றேன். அதேநேரம், கொண்டுவரப்படக்கூடிய திருத்தங்களின் ஊடான ஏற்பாடுகளும் காலதாமதம் என்கின்ற வலைக்குள் திணிக்கப்படுமானால், அத்தகைய திருத்தங்களால் எவ்விதமான பயன்களும் ஏற்படப் போவதில்லை என்பதுடன், வெறும் விரயங்களே எஞ்சும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts:

தமிழ் அரசியல் ஒட்டுண்ணிகள் இன்னுமொரு வரலாற்று தவறை செய்யக் கூடாது. - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!
ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் - திருக்கோணேஸ்வரத்தில் அமைச்சர் டக்...
யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கல...