நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பானவர்கள்: மக்கள் முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டியது எம்மீதாகும் – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Sunday, September 8th, 2019

தேர்தல்களின்போது நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பானவர்கள். நாம் எதிர்பார்க்கும் ஆணையை மக்கள் எமக்கு வழங்கும்போது, நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாமே நிறைவேற்றுவோம். ஆகவே மக்கள் முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டியது எம்மீதாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தினகரன் வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நேர்காணலில்  அவர் தெரிவித்தரிருப்பதாவது –

கேள்வி:

தெற்கில் இரண்டு கட்சிகள் தங்களது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில்,தெற்கின் எந்தவொரு வேட்பாளரும் உங்களுக்கு எதிரியல்ல, யாரை ஆதரிப்பதென இன்னமும் முடிவுசெய்யவில்லை எனக் கூறிவந்த நீங்கள், திடீரென உங்கள் முடிவை மாற்றியது ஏன்

பதில்:

நாம் திடீரென எந்த முடிவையும் எடுக்கவில்லை. கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என்பவற்றை ஆராய்ந்தே எதிர்காலத்திற்கான தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.

யுத்தம் நடைபெற்றபோது எமக்கிருந்த உயிர் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்தபடி, யுத்தத்தில் அகப்பட்டிருந்த மக்களை மீட்;பதற்கும், அவர்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பதற்கும் எமக்கு கிடைத்த அரசியல் பலத்துக்கு ஏற்றவாறும், எமது முயற்சிகளுக்கு ஏற்றவாறும் செயற்பட்டு எமது மக்களை பாதுகாத்திருக்கின்றோம்.

யுத்தம் நிறைவடைந்த பிறகு எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்பவும் நாம் அயராது பாடுபட்டு எம்மால் முடியுமானதை செய்து முடித்திருக்கின்றோம்.

நாம் ஆட்சியில் தொடர்ந்திருந்தால் இன்னும் எஞ்சியிருக்கும் தேவைகள் மற்றும் குறைபாடுகளையும்  செய்து முடித்திருப்போம். துரதி~;டவசமாக நாம் ஆட்சியில் தொடர்ந்திருக்க முடியவில்லை. நாம் ஆட்சியில் பங்கெடுத்து மக்களுக்கும், மண்ணுக்கும் உண்மையாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது எமது முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தியும், எம்மீது அவதூறு சுமத்தியும் வந்திருந்தவர்கள். ஆட்சிமாற்றத்தின் பின்னர் தாமும் சேர்ந்து ஏற்படுத்திய அவர்கள் கூறும் நல்லாட்சி அரசாங்கத்தை ஈடுபடுத்தி எமது மக்களுக்கு எந்தவொரு சேவையையும் செய்யவில்லை. நாம் முன்னெடுத்திருந்த பணிகளையும் கிடப்பில் போட்டுவிட்டனர். புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாகக் கூறி தைப்பொங்களுக்கு தீர்வு வரும், தீபாவளிக்கு தீர்வு வரும் என்றவர்கள் இப்போது புதிய அரசியலமைப்பும் சாத்தியமில்லை என்றும், அரசாங்கம் தம்மை ஏமாற்றிவிட்டதாகவும் கதை கூறுவதற்கு தயாராகிவிட்டார்கள்.

இந்த நிலையில் நாம் முன்னெடுத்த வாழ்வாதாரம், மீள்கட்டுமானப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும்,13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதனை ஒரு ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை சாத்தியப்படுத்துவதற்கும் நாம் தீர்மானித்தோம்.

அதற்கான பயணம் சவாலானதாகவும், கடினமானதாகவும் இருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்ற உறுதியை எடுத்துக்கொண்டு அதற்காக முழு அரப்பணிப்போடு நாம் முன்னோக்கி போகவேண்டும் என்று தீர்மானித்தோம்.

தமிழ் மக்களின் வாழ்க்கையில் நேற்று என்பது இழப்புக்களும், வலிகளும், ஆறாத ரணங்களும் நிறைந்ததுதான். அதை எவராலும் மறுக்கமுடியாது. ஆனால் எஞ்சியிருக்கும் மக்களின் வாழ்வும், எமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலமும் வடுக்களோடும், வலிகளோடும் தொடர முடியாததாகும்.

ஆகவே எமது மக்களின் வலிகளையும், இழப்புக்களையும் வைத்து சுயலாப தரகு அரசியல் நடத்துவதற்கு முயற்சிப்போருக்கு மாற்றாக, தமிழ் மக்களுக்கு சரியான வழியைக் காட்டி,அவர்களை எதிர்காலம் மீதான நம்பிக்கையோடு வாழ வைப்பதற்கு தேவையான திட்டங்களை வகுத்து எமது புதிய பயணத்தை தொடர எண்ணியுள்ளோம்.

அரசியல் மேடையில் தமிழ் மக்களை ஏமாற்றியும்,நம்பிக்கைத் துரோகம் செய்தும் சுய லாப அரசியல் நடத்தும் பணப்பெட்டி, சவப்பெட்டி அரசியலில் ஈடுபடுவோர் போலலல்லாமல், ஈ.பி.டி.பியாகிய நாம், சொன்னதைச் செய்பவர்களாகவும், செய்வதையே சொல்பவர்களாகவுமே பணியாற்றியுள்ளோம் என்பதை எமக்கு வாக்களிக்கும் மக்கள் நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கைக்கு நாமே பொறுப்பானவர்கள் என்பதால் அந்த நம்பிக்கையை நாம் தொடர்ந்து பாதுகாப்போம்.

கேள்வி:

இந்த நாட்டின் சிறுபான்மையினரில் பெரும்பாலானோர் கோட்டாபாய ராஜபக்சவை வெறுக்கின்ற நிலையில், தங்களின் எதிரியாக நினைக்கிற  நிலையில் அவர்கள் அவருக்கு வாக்களிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா?

பதில்:

கோட்டபாய ராஜபக்ச தொடர்பில் யார்? என்னவிதமாக கருத்துக் கூறுகின்றார்கள் என்பது தொடர்பாக நாம் அக்கறை கொள்ளவில்லை. ஏன்? என்றால் நான் ஒருபோதும் அரசுகளை நம்புங்கள். அரசுகள் தாம் வழங்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவார்கள் என்றும் நாம் ஒருபோதும் தமிழ் மக்களிடம் கூறியதில்லை.

நாம் யாரை ஆதரிக்கின்றோம், எந்தக் காரணங்களுக்காக ஆதரிக்கின்றோம் என்பதெல்லாம், எமது சுய நலன் சார்ந்த முடிவுகளல்ல. தமிழ் மக்களின் இன்றைய அவல நிலையையும், அதிலிருந்து அவர்களை எவ்விதமாக மீட்டெடுப்பது என்பதையும் சிந்தித்தே நாம் தீர்மானித்திருக்கின்றோம் என்பதை மக்கள் அறிவார்கள்.

தேர்தல்களின்போது நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பானவர்கள். நாம் எதிர்பார்க்கும் ஆணையை மக்கள் எமக்கு வழங்கும்போது, நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாமே நிறைவேற்றுவோம். ஆகவே மக்கள் முதலில் நம்பிக்கை கொள்ளவேண்டியது எம்மீதாகும்.

அரசுகள் ஏமாற்றிவிட்டன என்றோ, நாம் நம்பி ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்றோ நாம் ஒருபோதும் கூறியதுமில்லை. கூறப்போவதில்லை. தெற்கில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அந்த ஆட்சியில் நாம் பங்கெடுத்திருந்தால், எமது மக்களின் தேவைகள், பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருகின்ற பொறுப்பு எம்முடையதாகும். அதை நாம்ஒருபோதும் தட்டிக்கழித்துச் செயற்படுவதில்லை.

எனவே நீங்கள் கூறுகின்ற நிலைமை மாறும் என்றும்,மக்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு புதிய சிந்தனையின் அடிப்படையில், நம்பிக்கையோடு எமது கரங்களைப் பலப்படுத்தி புதிய அத்தியாயத்தை எதிர்வரும் காலங்களில் தொடங்குவார்கள் என்றும் நான் நம்புகின்றோம்.

கேள்வி

தமிழ் மக்களிடையே கூட்டமைப்புக்கான ஆதரவு சமீபகாலமாக சரிந்துவரும் நிலையில் உங்கள் கட்சிக்கான ஆதரவுத்தளம் பெருகி வந்தது. கோட்டாபயவை ஆதரிப்பதாக நீங்கள் அறிவித்தது, வடக்கு மக்களிடத்தில் உங்களுக்கான ஆதரவைப் பாதிக்காதா?

பதில்:

பாதிக்காது. வெற்றிபெறும் ஜனாதிபதியூடாக எவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக்காண முடியும் என்பதையும், அதைத் தொடர்ந்து புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் எவ்வாறான பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எம்மிடம் ஒரு தூரநோக்குப் பார்வை இருக்கின்றது.

அவற்றையெல்லாம் கணக்கிட்டே நாம் எமது தீர்மானத்தை எடுத்துள்ளோம்.கடந்த காலத்தில் போலித் தமிழ்த் தேசியம் பேசியும், நிறைவேற்றமுடியாத பொய் வாக்குறுதிகளை வழங்கியும் தமிழ் மக்களை ஏமாற்றியவர்களின் சுய ரூபத்தை தமிழ் மக்கள் இப்போது தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்கள்.

அந்த அனுபவமும், தெளிவும் இருப்பதால் இனிமேலும் தமிழ் மக்கள்ஏமாறமாட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலித் தேசியச் சாயம் வெளுத்ததால் மட்டும் எமது ஆதரவு அதிகரிக்கவில்லை. இதுவரை ஈ.பி.டி.பி காட்டிய பாதையில் தமிழ் மக்களுக்கு இழப்புக்களோ, துயரங்களோ ஏற்படவில்லை என்பதையும், அரசியல் ரீதியாக இதுவரை நாம் முன்வைத்த யோசனைகளே தீர்க்க தரிசனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதாலுமே எமது ஆதரவு தற்போது அதிகரித்து வருகின்றது.

உண்மையைப் புரிந்து கொண்டு மக்கள் எம்மை ஆதரிக்கத் தொடங்கியிருப்பதால்,இன்று கூட்டமைப்பை விட்டு, உன்னி கழன்று விடுவதைப்போன்று எம்மை ஏற்றுக்கொண்டு ஆதரிக்கும் மக்கள் ஒருபோதும் எம்மைவிட்டு விலாக மாட்டார்கள். கடந்த காலத்தில் எமது ஆதரவாளர்கள் என்பதற்காக அவர்கள் மீது ஆயுத அச்சுறுத்தல் இருந்தபோதும், அதையெல்லாம் மீறி எமக்கு ஆதரவளித்தவர்கள், வாக்களித்தவர்கள். அந்த உறுதியான மக்கள் ஆதரவு காரணமாகவே நான் இன்றுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இருந்து சற்று வேறுபட்டு, தொடர்ந்தும் ஆறாவது தடவையாகவும் தமிழ் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தும் ஜனநாயக அரசியல் தலைமையாகவும், நாடாளுமன்றத்தில் மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றேன் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன். ஆகவே எமக்கு ஆதரவான மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாற மாட்டார்கள் என்பதை எமது மக்கள் வெளிப்டுத்துவார்கள்.

கேள்வி:

இன்னமும் இரண்டு வருடகாலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான  நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் வடக்கில் கூட்டமைப்பினருக்கு சரிந்துள்ள ஆதரவை மீண்டும் கட்டயெழுப்பவே அவ்வாறு அவர் கூறியதாக நீங்கள் கருத்துக் கூறியிருந்தீர்கள். இனி வரக்கூடிய எந்தவொரு ஜனாதிபதியும்அல்லது அரசாங்கங்களும்  தமிழர்களுக்கான நியாயமான தீரவை வழங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளனவா?

பதில்:

தமிழ் மக்களிடையே வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம் பேசும் சுயலாப தரகுபணப்பெட்டி, சவப்பெட்டி அரசியல்வாதிகளின் நிலையை எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது. இவர்களை நம்புவதற்கும் தமிழ் மக்கள் தயாராக இல்லை என்பதாலேயே எமது மக்கள் தமது பிரச்சனைகளுக்கு தீர்வை வலியுறுத்தி வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் வாக்களித்ததால் “நல்லாட்சி” என்று கூறிக்கொண்டு ஆட்சி நடத்தியவர்களும், அந்த ஆட்சிக்கு முண்டு கொடுத்து பாதுகாத்தவர்களும் அரசியலில் எதிர்க்கட்சியும் ஆட்சியில் பங்கெடுத்திருந்த நிலையில் இனி எப்போதும் சாத்தியப்படாத நல்ல சந்தர்ப்பம் வாய்த்திருந்தபோது அதைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காதவர்கள். இப்போது அடுத்த இரண்டு வருடத்தில் அரசியல் தீர்வை வழங்குகின்றோம் என்று கூறுவது வேடிக்கையானதாகும்.

அத்தகைய உள்ளடக்கமற்ற வெற்று வாக்குறுதிகளை இனியும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை. அத்தகைய பொய்யான கதைகளை கூறியாவது கூட்டாக தமிழ் மக்களை ஏமாற்ற எத்தனிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கபட நாடகத்தை நம்புவதற்கும், அவர்களை நம்பி வாக்களிப்பதற்கும் தமிழ் மக்கள் இனித் தயாராக இல்லை.

எந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு தீர்வை தட்டில் வைத்துத் தந்துவிடுவார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசுகளால் மறுக்கமுடியாததும், இலங்கையின் அனைத்து இன மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அவர்களால் முழுமையாக அனுபவிக்கப்படுவதுமான மாகாணசபை முறைமையெனும் அரசியல் வடிவத்தை பலப்படுத்தி, பாதுகாத்து அதை நாம் எதிர்பார்க்கும் அரசியல் இலக்கு நோக்கி நகர்த்துவதே நடைமுறைச்சாத்தியமானதாகும்.

இதையே நாம் கடந்த முப்பது ஆண்டுகளாக கூறிவருகின்றோம். இலங்கை , இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அழுல்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இவ்வாறு நாம் கூறிவருவதை விமர்சித்து எம்மைத் தூற்றியவர்களும், மாகாணசபை முறைமையை தும்புத்தடியாலும் தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று நிராகரித்தவர்களும் இப்போது நாம் கூறிவந்த வழிமுறையே சரியானது என்பதை ஏற்றுக்கொள்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இதைவிடுத்து நட்சத்திரங்களை கொண்டுவந்து பூமியில் நடுவோம் என்றும்,தனி ராஜியங்களை சிங்களவர்களிடமிருந்து பலாத்காரமாக பறித்துத் தருவோம் என்றும் வாக்குறுதியளித்து, உணர்ச்சியூட்டி தமிழ் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி தமது சுயலாப அரசியலை முன்னெடுக்க முடியும் என்று செயற்படும் போலித் தமிழ்த் தேசியம் பேசும் பணப்பெட்டி, சவப்பெட்டி அரசியல் நடத்தும் அனைவரையும் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் நிராகரிப்பார்கள் என்றே நம்புகின்றேன்.

(நன்றி  தினகரன் வார இதழ்)

Related posts: