நாட்டின் மின்வலு உற்பத்தி தொடர்பில் பொறிமுறையினை உருவாக்க இப்போதாவது முன்வாருங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, March 29th, 2019

இன்று இந்த நாட்டில் இருக்கின்ற எத்தனையோ அரச அலுவலகங்களை எடுத்துக் கொண்டால், பகல் வேளையிலும் மின்குமிழ்கள் இன்றி பணியாற்ற முடியாத நிலையிலான ஏற்பாடுகளிலேயே அவை அமையப் பெற்றுள்ளன. பகலில் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக இல்லை. சூரிய ஒளி மின்சாரம் பற்றி கூறிய நீங்கள், இன்று வரையில் எத்தனை அரச அலுவலகங்களுக்கு அந்த வாய்ப்பினை எற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள்? என்ற கேள்வியும் எழுகின்றது என ஈழ மக்கள்; ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு, மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்iகில் –

மழை வந்தால்தான் மின்சார உற்பத்தி நடைபெறும் என்கின்ற எதிர்பார்பிலிருந்து மாறுபட்ட திட்டங்கள் தொடர்பில் இந்த நாடு சிந்திக்க வேண்டிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்துவிட்டன. அந்தச் சநத்தர்ப்பங்களில் எதனையும் சரிவரப் பயன்படுத்த முடியாத, நீங்கள் எதிர்காலத்திலும் இதே நிலையில்தான் இருக்கப் போகின்றீர்களா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

இந்திய அரசின் உதவியுடன் மேலுமொரு அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில்  கூறப்பட்டு, இன்று ஆறு வருடங்களும் கடந்துவிட்ட நிலையில், அது தொடர்பில் இன்னமும் இழுபறி நிலையே ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்திய உதவியுடனான இந்த அனல் மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை நீங்கள் எரிவாயு உற்பத்தி நிலையமாக மாற்றுமாறு கோரி வருவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

பாரிய பரிமாணத்தினாலான சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலைய திட்டங்கள் யாவும், உரிய சந்தர்ப்பங்களில் அனுமதி கிடைக்காமை காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக அவற்றின் முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

2037ஆம் ஆண்டாகும்போது தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பிற்கு 1,389 கிகா வோட்  சூரிய வலு மின் உற்பத்தி எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. அதுகாலவரைக்குள் நிலக்கரியினால் 2,700 கிகா வோட் அலகு உற்பத்தி செய்ய முடியுமென மின்சார சபை கூறுவதாகத் தெரிய வருகின்றது. எனினும், இதற்கான வேலைத் திட்டங்கள் என்ன? என்பது பற்றி தெளிவில்லை என்றே கூறப்படுகின்றது.

இந்த நாட்டில் இப்படியே, 2010ல் அது நடக்கும், 2015ல் இது நடக்கும், 2020ல் எல்லாம் நடக்கும் எனக் கூறிக் கூறியே இருக்கின்ற இந்த காலங்கள், எதுவுமே இல்லாமல் வெறுமனே கழிந்து கொண்டிருக்கின்றன.

எனவே, இந்த நாட்டின் மின்வலு உற்பத்தி தொடர்பில் உரியதொரு பொறிமுறையினை ஏற்படுத்துவதற்கு இப்போதாவது முன்வாருங்கள். இயற்கை மழையும் தற்போதைக்கு கைகொடுப்பதாக இல்லை. செயற்கை மழையும் கை கொடுப்பதாக இல்லை. இந்த நிலையில் இப்போது போய் கடவுளிடம் மன்றாடுவதில் எவ்விதமான பயனும் இல்லை. கடவுள் பல்வேறு சந்தர்ப்பங்களை உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அதனை எல்லாம் நீங்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை.

Related posts:


மக்களுக்கு கௌரவமான வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனறே தொடர்ந்தும் அரசியலில் இருக்கின்றேன் –...
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவ...
ஐ.நா சபையின் விவசாய நடவடிக்கை பிரிவின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையா...