நந்திக்கடல் ஆளமாக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019


நந்திக்கடல் ஆழமாக்கப்பட்டு அக்கடற் பகுதியை நம்பி வாழும் மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து வரும் நிலையில் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி அவர்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது – கடற்றொழிலார் சங்க பிரதிநிதிகளால் பல்வேறு தேவைப்பாடுகளும் பிரச்சினைகளும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

குறிப்பாக யுத்ததின் பின்னர் மீள் குடியேறிய குறித்த மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலை முன்னெடுத்துச் செல்ல இன்னோரன்ன பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவது மட்டுமல்லாது தொழிலை மேற்கொள்வதற்கு தேவையான வளங்கள் அற்ற நிலையிலும் காணப்படுகின்றனர்.

அத்துடன் சட்டவிரோ உபகரணங்களை பயன்படுத்தி சிலர் தொழிலை மேற்கொள்வதால் இதர மீனவர்களது தொழில் பாரிய அளவில் திட்டமிட்டு பறிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் பிற பகுதி கடற்றொழிலாளர்கள் இப்பகுதிகளில் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, இயற்கையின் பாதிப்பு என பலவகைகளிலும் பாதிப்பக்கள் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வையும் பாதுகாப்பையும் பெற்று தந்து தமது தொழில் நடவடிக்கைளுக்கு உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்தனர்.

கடற்றொழிலாளர்களத பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில் –

நான் தேசிய ரீதியான அமைச்சராக இருக்கின்ற போதிலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன். அத்துடன் கடற் றொழிலை மட்டும் நம்பியிராது அதனுடன் தொடர்புடைய ஏனைய தொழில் முயற்சிகளை உருவாக்கி தமிழ் மக்களின் வாழ்வாதார பொருளாதார நிலையில் மாற்றங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.

அத்துடன் நந்திக்கடல் மற்றும் நாயாறு கடல் பிரதேசங்களல் காணப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர்கள், மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: