காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, September 18th, 2019

வடக்கிலே காணப்படுகின்ற இயற்கை அமைவிடங்களைப் பயன்படுத்தி, வாணிப கப்பற்துறை சார்ந்து மிகவும் பயனுள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இருப்பினும், அத்தகைய எந்தவொரு முயற்சிகளையும் இதுவரையில் காண இயலாதுள்ளது.

தற்போது இருக்கின்ற காங்கேசன்துறை துறைமுகத்தையாவது தயார் செய்து, தென்னிந்தியாவிலிருந்து நேரடியாகவே பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். அது இலகுவானதும், மிகவும் இலாபகரமானதாகவும் இருக்கும். இருந்தாலும், இவற்றை எல்லாம் செய்வதற்கு நீங்கள் முன்வருவதாக இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற வணிகக் கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்’ இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இருக்கின்ற துறைமுகங்களையே விற்றுக் கொண்டிருக்கின்ற நீங்கள், புதிதாக ஏதேனும் துறைமுகங்களை ஏற்படுத்தவோ, இருக்கின்ற இயற்கைத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கோ முன்வரப் போவதில்லை என்பது தெரிகின்றது.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தாலும், அதனையும் விற்றுவிடுவீர்களோ? என்ற அச்சமே எமது மக்களிடையே காணப்படுகின்றது.

எனவே, இருக்கின்ற இந்த நாட்டு வளங்களைக் காப்பாற்றுங்கள், சொத்துக்களைப் பாதுகாக்க முன்வாருங்கள். அதற்கேற்ப சட்டங்களைக் கொண்டு வாருங்கள் என வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும், வாணிப கப்பற்றொழில் சார்ந்தவர்களுக்கான வழங்கப்படுகின்ற சான்றிதழ்கள் தொடர்பில் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டு வந்தன. இப்போது அவை சீர் செய்யப்படுள்ளனவா என்பது குறித்து அறிய விரும்புவதோடு நேற்று முன்தினம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு தொடர்பாகவும் எனது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

Related posts: