எமக்கு ஆதரவான மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாற மாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, September 9th, 2019

இதுவரை ஈ.பி.டி.பி காட்டிய பாதையில் தமிழ் மக்களுக்கு இழப்புக்களோ, துயரங்களோ ஏற்படவில்லை என்பதையும், அரசியல் ரீதியாக இதுவரை நாம் முன்வைத்த யோசனைகளே தீர்க்க தரிசனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதாலுமே எமது ஆதரவு தற்போது அதிகரித்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களிடையே கூட்டமைப்புக்கான ஆதரவு சமீபகாலமாக சரிந்துவரும் நிலையில் உங்கள் கட்சிக்கான ஆதரவுத்தளம் பெருகி வந்தது. கோட்டாபயவை ஆதரிப்பதாக நீங்கள் அறிவித்தது, வடக்கு மக்களிடத்தில் உங்களுக்கான ஆதரவைப் பாதிக்காதா? என தினகரன் வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது நிருபரால் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் –

வெற்றிபெறும் ஜனாதிபதியூடாக எவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக்காண முடியும் என்பதையும், அதைத் தொடர்ந்து புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் எவ்வாறான பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எம்மிடம் ஒரு தூரநோக்குப் பார்வை இருக்கின்றது.

அவற்றையெல்லாம் கணக்கிட்டே நாம் எமது தீர்மானத்தை எடுத்துள்ளோம். கடந்த காலத்தில் போலித் தமிழ்த் தேசியம் பேசியும், நிறைவேற்றமுடியாத பொய் வாக்குறுதிகளை வழங்கியும் தமிழ் மக்களை ஏமாற்றியவர்களின் சுய ரூபத்தை தமிழ் மக்கள் இப்போது தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்கள்.

அந்த அனுபவமும், தெளிவும் இருப்பதால் இனிமேலும் தமிழ் மக்கள்ஏமாறமாட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலித் தேசியச் சாயம் வெளுத்ததால் மட்டும் எமது ஆதரவு அதிகரிக்கவில்லை. இதுவரை ஈ.பி.டி.பி காட்டிய பாதையில் தமிழ் மக்களுக்கு இழப்புக்களோ, துயரங்களோ ஏற்படவில்லை என்பதையும், அரசியல் ரீதியாக இதுவரை நாம் முன்வைத்த யோசனைகளே தீர்க்க தரிசனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதாலுமே எமது ஆதரவு தற்போது அதிகரித்து வருகின்றது.

உண்மையைப் புரிந்து கொண்டு மக்கள் எம்மை ஆதரிக்கத் தொடங்கியிருப்பதால்,இன்று கூட்டமைப்பை விட்டு, உண்ணி கழன்று விடுவதைப்போன்று எம்மை ஏற்றுக்கொண்டு ஆதரிக்கும் மக்கள் ஒருபோதும் எம்மைவிட்டு விலாக மாட்டார்கள். கடந்த காலத்தில் எமது ஆதரவாளர்கள் என்பதற்காக அவர்கள் மீது ஆயுத அச்சுறுத்தல் இருந்தபோதும், அதையெல்லாம் மீறி எமக்கு ஆதரவளித்தவர்கள், வாக்களித்தவர்கள். அந்த உறுதியான மக்கள் ஆதரவு காரணமாகவே நான் இன்றுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இருந்து சற்று வேறுபட்டு, தொடர்ந்தும் ஆறாவது தடவையாகவும் தமிழ் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தும் ஜனநாயக அரசியல் தலைமையாகவும், நாடாளுமன்றத்தில் மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றேன் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன். ஆகவே எமக்கு ஆதரவான மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாற மாட்டார்கள் என்பதை எமது மக்கள் வெளிப்டுத்துவார்கள்.

Related posts:

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளு...
வரி விதிப்புகளும், பொருட்களின் விலையேற்றமும் மனித வளத்தை நாட்டைவிட்டு வெளியேற்றுகிறது – நாடாளுமன்றில...
ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் பச்சிலைப்பள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் வருமானம் மூன்று இலட்சம...