‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ ஊடாக வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Thursday, September 5th, 2019

இலங்கையில் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டதும் எனக் கூறப்படுகின்ற ‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ கண்காட்சியின் மூன்றாவது கண்காட்சி எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது. ஏற்கனவே இந்தக் கண்காட்சி மொனராகலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், மேற்படி கண்காட்சிகள் தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருந்ததாக ஊடகங்கள் சுட்டிக்காட்டி இருந்தன. இத்தகைய நிலையில், யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள மேற்படி கண்காட்சி தொடர்பிலும் தற்போது சில கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மேற்படி கண்காட்சியின் ஆடம்பரக் கூடாரங்கள், மேடை, மின்னொளி அடங்கலான பூமி அலங்கரிப்பு ஏற்பாட்டுக்கெனக் கோரப்பட்டுள்ள கேள்வியில் (ரென்டர்) முறைகேடு இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு மேற்படி கண்காட்சியின் ஆரம்பமே முறைகேடாக அமையுமெனில், இந்தக் கண்காட்சியின் ஊடான எமது மக்களுக்கான பயன்கள் தொடர்பில் மிகுந்த சந்தேகம் எமது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேநேரம், மேற்படி திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெற வங்கிகளை நாடுகின்ற வடக்கு மாகாணத்தில் பெரும்பாலான மக்கள், வங்கிகளால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எனவே, இவ் விடயம் தொடர்பிலான பின்வரும் கேள்விகள் எழுந்துள்ளன.

யாழ்ப்பாணததில் ‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ கண்காட்சி நடத்துவதற்கான பூமி அலங்கரிப்பு ஏற்பாட்டுக்கென கோரப்பட்டிருந்த கேள்வி (ரென்ரர்) தொடர்பில் ஆகக் குறைந்த தொகையினை அரச நிறுவனமான செலசினே நிறுவனம் சமர்ப்பித்திருந்தா?

செலசினே நிறுவனத்திற்கு மேற்படி கேள்வி (ரென்ரர்) வழங்கப்பட்டதா? இல்லையேல் அதற்கான காரணம் என்ன?

கேள்விகள் (ரென்ரர்) சமர்ப்பிக்கப்பட்டு அவை நிராகரிக்கப்பட்ட நிலையில், நிராகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மேன்முறையீடுகளை முன்வைக்கின்ற நிலையில், அவை தொடர்பில் ஆராய்ந்து பாராது, மேற்படி கேள்வி (ரென்டர்) குறிப்பிட்ட நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதா?

செலசினே நிறுவனத்திற்கு  வழங்கப்படாமல், வேறொரு நிறுவனத்திற்கு மேற்படி கேள்வி (ரென்டர்) வழங்கப்பட்டதால் செலவுத் தொகையில் ஏற்பட்டுள்ள வித்தியாசம் எவ்வளவு?

‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ ஊடாக வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்?

ஏற்கனவே ‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ள மொனராகலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மேற்படி திட்டத்தின் மக்கள் பயன்பாடுகள் எந்தளவில் இருக்கின்றன?

மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்; டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிலையியற் கட்டளை 27ஃ2 ன் கீழ் நிலையியற் கட்டளை 27ஃ2 ன் கீழ்  நடைபெற்ற விவாதத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: