அரச ஒடுக்கு முறையைவிட அமெரிக்க அடக்குமுறை மக்களை கூண்டோடு அழித்துவிடும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, August 9th, 2019

சோபா ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்கா மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான டேவிட் மெக்கிரே – David Me Guire கூறியிருந்த ஒரு கருத்தின்படி, 

இந்து – பசுபிக் வலயத்தில் ஜனநாயகவாதிகள் என்ற வகையில் அமெரிக்காவினதும், இலங்கையினதும் பலம்மிக்க பங்களிப்பினைக் கட்டியெழுப்பிக் கொண்டு, எமது இரு நாட்டு மக்களினதும், வலயத்தினதும் பாதுகாப்பினை மேலும் விருத்தி செய்வதற்கே’ இந்த ஒப்பந்தம் எனக் கூறப்பட்டுள்ளது.

இது உண்மையெனில், இந்து – பசுபிக் வலயத்தின் பாதுகாப்புத் தொடர்பில் அமெரிக்காவுக்கு இருக்கின்ற அக்கறை என்ன? என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாடுகள் / வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் என்பவற்றுடன் அரசாங்கம் / அரசாங்க முகவர் நிறுவனங்கள் என்பன செய்து கொள்கின்ற ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல்’ பற்றிய சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்து – பசுபிக் வலயத்தில் மாத்திரமன்றி இன்று ஆசியா முழுவதிலுமாக குறிப்பாக வர்த்தகப் பாதையினை சீனா கைப்பற்றிக் கொண்டுள்ள நிலையில், இந்த சவாலுக்கு முகங்கொடுப்பதற்கும், எதிர் சவாலினை மேற்கொள்வதற்குமாக அமெரிக்கா சீனாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நாடுகளிடையே தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக இந்த சோபா ஒப்பந்தத்தைக் கொண்டு வருகின்றது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கின்றது.

எனவே, தற்போதைய நிலையில், சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அமெரிக்கா திருகோணமலைத் துறைமுகத்தைத் தேர்ந்தெடுக்கவே முயற்சிக்கின்றது என்பதே இப்போதைய தகவல்களாக உள்ளன.

இப்போதும்கூட அமெரிக்கா, வடக்கிலே முல்லைத்தீவிலிருந்து, கிழக்கிலே திருகோணமலை வரையில்  எண்ணெய் வள ஆய்வு எனக் கூறிக்கொண்டு, திருகோணமலைத் துறைமுகத்திலே கடற்படைத் தளமொன்றினை அமைத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இதே நேரம், பிரித்தானியாவும் திருகோணமலையிலே கடற்படைத் தளமொன்றை அமைப்பதில் ஆர்வங் கொண்டுள்ளதாக லண்டன் ரெலிகிராப் ஒரு தகவலாக அண்மையில் வெளியிட்டிருக்கின்றது.

அந்த வகையில் பூகோள நலன்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் படைத்தளமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக திருகோணமலை – காங்கேசன்துறை அடங்கலான பகுதியில் அமைய வாய்ப்பிருக்கிறதென்றே கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகையதோர் ஏற்பாடு அமையுமிடத்து எமது மக்களின் வாழ்க்கை என்பது பெரும் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. எனவே இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு வடக்கு, கிழக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும் என்பதை இந்த இடத்திலே வலியுறுத்த விரும்புகின்றேன்.

அரசாங்கத்திடம் அடிக்கடி போய்த் திருட்டுத்தனமாக நிதி பெற்றுக்கொண்டு, இந்த அரசு எமது மக்களுக்கு நீதி தரவில்லை என வெறுமனே பிதற்றித் திரியாமல், இந்த விடயத்திலாவது அக்கறையுடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றே நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அப்படி இல்லாவிடில், அரச ஒடுக்கு முறையைவிட அமெரிக்க அடக்குமுறை எமது மக்களை கூண்டோடு அழித்துவிடக் கூடிய நிலைமை உருவாகும் என்பதை முன்கூட்டியே இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.


முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்...
வாக்குகளால் அதிகாரத்தைப் பெற்றவர்கள் வாக்களித்த மக்களுக்கு என்ன செய்தார்கள்?-டக்ளஸ் தேவானந்தா கேள்வி...
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறை மீது சுமத்திவிட நாம் தயாரில்லை - டக்ளஸ் தேவானந்தா!
மலையக மக்களின் உரிமைப் போராட்டம் முடிவற்றுத் தொடர்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட...
பியரின் விலைகுறைப்பு இளவயதினரின் மதுப்பழக்கத்தை அதிகரிக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக...