அடுத்த ஐந்து வருடத்தில் தீவக பகுதியை செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றுவேன் – தீவகத்தில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, September 26th, 2019

வரவுள்ள ஆட்சி மாற்றத்தில் நாம் பங்காளிகளர்களாக இருப்பதுடன் எம்மை நோக்கி நம்பிக்கையுடன் தமது அரசியல் பலத்தை தமிழ் மக்கள் தருவார்களேயானால் கடந்த காலங்களில் எமது மக்கள் பட்டுவரும் பெருந் துயரங்கள் அனைத்துக்கும் நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தர என்னால் முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

நேற்றையதினம் ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் –

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது மக்களை வெற்றியாளர்களாக்கி அவர்களது எதிர்காலம் தொடர்பில் எதுவித அச்சமும் இன்றி வாழக்கூடிய ஒரு நிரந்தரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அரசியல் ஜனகநாயக வழிமுறையில் உழைத்துவருகின்றோம்.

நாம் எமது மக்களை தூண்டிவிட்டு பலி கொள்ளும் நடவடிக்கைகளையோ அன்றி அதனை முதலீடாக வைத்து அரசியல் செய்வதையோ ஒருபோதும் விரும்பியது கிடையாது. எமது கொள்கை எமது மக்கள் தத்தமது உரிமைகளுடனும் சுய கௌரவத்துடனும் நிரந்தரமாக அமைதியாதன வாழ்வியலை வாழவேண்டும் என்பதுதான்.

மகிந்த ராஜபக்சவின் கட்சியால் முன்னிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் தெரிவு சரியானதா தவறானதா என்பது பற்றியெல்லாம் நாம் கண்டுகொள்ளப் போவதில்லை. எங்களை நம்பி வாக்களியுங்கள் நாம் உங்களின் அடிப்படை பிரச்சினைகள் முதற்கொண்டு அரசியல் அபிலாஷைகள் வரையும் தீர்வுகளை கண்டு தருகின்றேன் என்றுதான் கூறிவருகின்றேன். நாம் சாதித்துக் காட்டுவோம் என்பதற்கு எமது கடந்தகால வரலாறுகள் சான்றாக உள்ளன.

தற்போது எமது மக்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவதற்கு ஒருதரப்பை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. யுத்தத்தையோ அல்லது அதில் ஈடுபட்டவர்களுடன் அதை ஊக்கப்படுத்தியவர்களும் தான் காரணமாக உள்ளனர். ஆனாலும் இன்றுள்ள இந்த வறுமையான சூழ்நிலையை எம்மால் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு. அதற்கான அரசியல் பலத்தை எமது மக்கள் எம்மிடம் தருவார்களேயானால் அடுத்த அரசியல் பருவ காலத்தில் இதை நான் சாதித்துக் காட்டுவேன்.

இன்று மகிந்த ராஜபக்ச முன்னிறுத்தியுள்ள வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ச வெற்றிபெற்றால் நாம் அந்த அரசின் பங்காளிகளாகலாம். அதனூடாக வரவுள்ள பொதுத் தேர்தலில் நாம் வெற்றிபெற்று அந்த அரசின் அமைச்சரவையில் பொறுப்புக்களை எடுத்து எமது மக்களின்  பல தேவைப்பாடுகளை எம்மால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு.

எமது மக்கள் இன்று படும் அவலங்களை தடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் ஏற்கனவே தீர்க்க தரிசனமாக 1987 இல் உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் அரசியல் ஜனநாயக வழிமுறைக்கு வாருங்கள் என அனைவரிடமும் கோரியிருந்தேன். அதை ஏற்று தமிழ் தரப்பு வந்திருந்தால் இன்று வடக்கு கிழக்கு இணைந்த மாநில அரசில் நாம் சுய நிர்ணய உரிமையுடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அதை சுயநலன்களால் தமிழ் தரப்பு தவறவிட்டுள்ளது.

அடுத்த ஆட்சியில் தீவக பகுதி மக்களது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் நிச்சயம் முன்னெடுப்பேன். அதற்கான  பொறிமுறையும் செயற்றிட்டமும் எம்மிடம் உண்டு.

புதிய ஆட்சி அமைக்கப்பட்டு ஒரு வருடகாலத்திற்குள் தீவக பகுதியில் உள்ள வழங்களை கொண்டு மக்களது தேவைக்கேற்றளவு நீரை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் ஆட்சி நிறைவடையும் காலத்திற்குள் இரணைமடு உள்ளிட்ட நீர் நிலைகளிலிருந்து குழாய் வழியாக குடாநாட்டுக்கு நீரை கொண்டுவந்து நீர்ப் பிரச்சினைக்கான தீர்வை நிரந்தரமாக பெற்றுத்தர நான் நடவடிக்கை  மேற்கொள்வேன்.

அதுமட்டுமல்லாது கடந்த காலத்தில் இப்பிரதேசத்தை அழிவிலிருந்து பாதுகாத்தது மட்டுமல்லாது இப்பகுதி மக்களை அச்சமின்றி தத்தமது முயற்சிகளில் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொடுத்திருந்தோம்.

இப்பிரதேசத்தில் உள்ள வழங்களை கொண்டு புதிய தொழில் முயற்சிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கி இப்பிரதேசத்தை ஒரு வளம் மிக்க பகுதியாக மாற்றிக் காட்டுவேன்.

நாம் எமது மக்கள் வெற்றிகாணவேண்டும் என்ற நோக்கத்துடனேயே எமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் இதர தமிழ் தரப்பினர் தாமும் தமது குடும்பங்களும் வெற்றிபெற்று சுகபோகமாக வாழ்ந்தால் சரி என்ற நோக்கத்துடனேயே எமது மக்களின் வாக்குகளை அபகரித்து செயற்படுகின்றனர். இதுதான் எமது துன்பங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளது.

அந்தவகையில் வரவுள்ள ஆட்சி மாற்றத்தில் நாம் பங்காளர்களாக இருப்போமானால் அடுத்த 5 ஆண்டுகால அரசியல் பருவகாலத்திற்குள் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் அதிகளவான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை என்னால் பெற்றுத்தர முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே கட்சியின் வேலணை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் எதிர்கால அரசியல் முன்நகர்வு தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத...
அச்சம் கொள்ள வேண்டாம் – சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி ஆசிரியர்களிடம் டக்ளஸ் எம்.பி உறுதி!
யாழ்ப்பாணத்தில் 39 ஆலங்களின் புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதியுதவி வழங்கி வை...