ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி அமைச்சர் டக்ளசின் பணிப்பில் பகிர்ந்தளிப்பு – முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்!

Tuesday, October 5th, 2021

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியை காலபோக நெற்செய்கைக்காக காணியற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக அளவிடும் பணிகள் இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

சுமார் 196 ஏக்கர் அளவான இந்தக் காணியை தமக்கு மீட்டுத் தருமாறு பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

நீண்டகாலம் தனிநபர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பின் கீழிருந்த இந்தக் காணியை மீட்பதற்கு பல்வேறு காலகட்டங்களில் பல அரசியல் தலைமைகளிடமும் பிரதேச அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோள் நிறைவேற்றப்படாத நிலையில், 2020இல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பொறுப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்ற பின்னர் அவரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரைச்சிப் பிரதேச செயலாளர் பாலசிங்கம் ஜெயகரன் தலைமையில் நேற்று கரும்புத்தோட்ட பிள்ளையார் கோவிலில் உத்தியோகபூர்வமாக நடாத்தப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து காணிகளை அளக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன், பிரதேச காணி உத்தியோகத்தர் கருணா, நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர், கிராமசேவையாளர் ஆகியோருடன் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு காணி அளவிடும் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

பிள்ளையார் ஆலய நிகழ்வைத் தொடர்ந்து, நில அளவைத் திணைக்களத்தினர் 196 ஏக்கர் அளவான கரும்புத்தோட்டக் காணியை அளவிடும் பணிகளை  ஆரம்பித்துள்ளனர்.

நில அளவைப் பணிகள் நிறைவடைந்ததும், பிரதேச அமைப்புக்கள் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணிகளற்ற தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு காலபோக நெற்செய்கைக்காக தலா ஒரு ஏக்கர் காணி வழங்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் இந்தக் காணியில் படிப்படியாக கரும்புச் செய்கையை ஆரம்பித்து விரிவாக்குவதன் மூலம், கரும்புப் பாணி, சர்க்கரை உற்பத்திகளிலிருந்து பாரிய சீனி உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்குவது வரையில் பரந்தளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவரது மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வழிமுறைகளில் தடைகள் ஏற்படுத்தப்படக் கூடாது - டக்ளஸ் எம்...
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களுடனான சந்திப்பு எமக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது – செயல...
அமைச்சரவை அனுமதியுடன் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் –- டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!