வேலியே பயிரை மேய்கின்ற இத்தகைய நிலை எப்போது தகர்த்தெறியப்படும்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Monday, November 27th, 2017

புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் புலிகள் இயக்கத்தின் பெண் உறுப்பினர்கள் போதியளவு வாழ்வாதாரங்களும் இன்றிய நிலையில் சமூக ஏற்புகளும் குறைந்த நிலையில் கைவிடப்பட்டதொரு நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை பொருளாதார ரீதியிலும் சமூக மட்டத்து மேம்பாட்டு ரீதியிலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தது சிறுவர்கள் மீதான அக்கறையின்மை என்பது எமது சமூகத்தில் அதிகரித்துள்ள நிலை காணப்படுகின்றது. பாடசாலைகளில் இடை விலகல்களின் அதிகரிப்பும் காணப்படுகின்றது. பல்வேறு சமூக முறைகேடுகளுக்கு இவர்களைப் பயன்படுத்தகின்ற நிலைகளும் இல்லாமல் இல்லை. அதே நேரம் சிறுவர் துஸ்பிரயோகங்களும் இலங்கையில் யாழ் மாவட்டத்திலேயே அதிகரித்துள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்த நிலை பொதுவாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகரித்தும் நிலைப்படுத்தப்பட்டுள்ளதுமான ஒரு நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியாவுக்கு நடந்த கொடூரம் இனிமேல் இந்த நாட்டில் எங்குமே நடக்கக்கூடாது என நாங்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி வவுனியா நெளுக்குளம் பகுதியில் ஒரு சிறுமி பாலியல் சார்ந்த வன்முறைக்கு உட்படுத்;தப்பட்டுள்ளார். இத்தகைய சிறுமிகள் மீதான பாலியல் சார்ந்த வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும்  படுகொலைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு பொறுப்பான பதவி நிலைகளில் இருப்பவர்களே – அதுவும் பெண்களே – துணை போகின்ற துர்ப்பாக்கிய நிலைமைகளும் வடக்கில் இல்லாமல் இல்லை. வேலியே பயிரை மேய்கின்ற இத்தகைய நிலை எப்போது தகர்த்தெறியப்படும்? இத்தகையவர்களுக்கு எதிராக சட்டம் கைட்டிக் கொண்டிருப்பது ஏன்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

Related posts: